தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி ஊராட்சியில் இருளப்பட்டி, நாகலூர், பீரங்கி நகர், இந்திரா நகர் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் இந்திரா நகர், பீரங்கி நகர் இரண்டு பகுதிகளிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அன்றாடம் தினக் கூலி வேலை செய்தும் வெளியூர்களுக்கு சென்று கூலி வேலை செய்தும் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த மக்களுக்கு கழிவுநீர் கால்வாய் குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் இந்த இருளர் சமூக மக்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு இந்திரா நினைவு குடியிருப்பு சார்பில் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 

 


 


’இன்று போய் நாளை வா’ என அலைக்கழிக்கப்பட்ட விவசாயிகள் - முற்றுகையிட்டதால் கூட்டுறவு கடன் சங்கத்தை பூட்டி சென்ற அலுவலர்கள்


இந்நிலையில் வீடுகள் முற்றிலுமாக மேற்கூரை சேதமடைந்து வெறும் கம்பிகள் மட்டுமே இருந்து வருகிறது. இதனால் மழைக் காலங்களில் மேற்கூரை பெயர்ந்து மேலே விழுவதும், தண்ணீர் கசிந்து வருவதால், வீடுகளில் படுக்க முடியாத நிலையில் மக்கள் அச்சமடைந்து வந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையில் இருளர் இன மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக வீடுகளை புதுப்பிக்கக் கோரி மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்று வேதனை தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு, நமது ஏபிபி நாடு இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.





 


கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு எல்லையில் தடுப்பூசி - மறுப்பு தெரிவித்தால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்


இதனை தொடர்ந்து நமது செய்தி எதிரொலியாக இருளப்பட்டி இருளர் குடியிருப்பு பகுதியில் இன்று பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்தப் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள  வீடுகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து பீரங்கி நகர், இந்திரா நகர் இருளர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள் முழுவதுமாகவே சேதமடைந்துள்ளது.




 


இந்த வீடுகளை புதுப்பிக்க இயலாத நிலையில் இருப்பதால்,  பழுதாகி உள்ள 54 வீடுகளையும் இடித்து விட்டு புதிதாக வீடு கட்டித் தரவும் நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் தெருக்களில் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்காமல் இருப்பதற்காக, சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, இருளர் இன மக்களிடம் உறுதி அளித்தார். இதனால் இந்திரா நகர், பீரங்கி நகர் இருளர் இன மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, நன்றி தெரிவித்தனர்.