ஆன்லைன் ரம்மி, விளையாட்டுகள் என்ற சூதாட்டம் வலைப்பின்னலாக மக்களை இழுத்து உள்ளே போட்டுக் கொண்டிருக்கிறது. சென்னை அருகே ஆண்டுக்கு ரூ.28 லட்சம் சம்பாதித்து வந்த பன்னாட்டு வங்கி அதிகாரி, கட்டிய மனைவி, பெற்ற குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.1 கோடிக்கு மேல் பணத்தை இழந்ததே இதற்குக் காரணம் என்று விசாரணையில் செய்தி வெளியாகியுள்ளது.
அதேபோல ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பணத்தை ஈடுகட்ட, திருவான்மியூர் ரயில் நிலைய ஊழியரே திருடனாக மாறிக் கொள்ளையடித்த சம்பவமும் அண்மையில் நிகழ்ந்தது.
கடந்த 4 மாதத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் 7 தற்கொலைகள், 3 கொலைகள், கொள்ளை எனத் துயரச் சம்பவங்கள் நீண்டுகொண்டிருக்கும் சூழலில், ஆக்டோபஸாக ஆன்லைன் விளையாட்டுகள் மாறிவருவது ஏன், அவற்றில் இருந்து விடுபடுவது எப்படி? என விரிவாகப் பேசுகிறார் கல்வி உளவியலாளர் மருத்துவர் சரண்யா ஜெயக்குமார்.
தினசரி செய்திகளில் ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்துத் தொடர்ந்து பேசப்படும் சூழலில், கொரோனா காலகட்டத்தில் இது அதிகரித்திருக்கிறதா?
ஸ்மார்ட் போன்கள் என்பவை முதலில் குடும்பத் தலைவரிடம் மட்டுமே இருக்கும். ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள், வீட்டில் இருந்து வேலை ஆகிய காரணங்களால், ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்புகளின் தேவை அதிகரித்தது. அவற்றை வாங்கிய மக்கள், ஓய்வு நேரங்களில் அதிலுள்ள விளையாட்டுகள் உள்ளிட்ட பிற வசதிகளையும் உபயோகிக்க ஆசைப்படுகின்றனர். இதற்கான செயலிகளைப் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். இதனால் கொரோனா காலகட்டத்தில் இந்தப் போக்கு அதிகரித்திருக்கிறது.
ஒருவருக்குக் கல்வி, வேலை, குடும்பம் என்பதற்கு அடுத்தபடியாகவே பொழுதுபோக்கு இருக்க வேண்டும். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி, பொழுதுபோக்கே பிரதானப் புள்ளியாக மாறுவதற்கு என்ன காரணம்?
குடும்பத்தில் தனித்தனியாக ஒவ்வொருக்கும் போன் பயன்பாடு வந்துவிட்டது. தாத்தா, பாட்டியில் தொடங்கி, குழந்தைகள் வரை ஒவ்வொருவருக்கும் தனித்தனி உபகரணங்கள். இதனால் திரை பொழுதுபோக்கு (screen entertainment) அதிகரித்துவிட்டது. அது பளிச்சிடும், ஒளிரும், சத்தமிடும், வண்ணமயமான அம்சங்களுடன் இருக்கிறது. ஆனால் வீட்டில் இருப்போரைப் பார்த்தால், சலிப்பாக இருப்பதாக வளரிளம் பருவத்தினர் கூறுகின்றனர். குடும்பத்தில் யாரும் நிஜத்தில் அத்தகைய ஈர்க்கும் அம்சங்களுடன் இருக்க முடியாது. இவைதான் விளையாடுபவர்களை ஈர்க்கும் காரணிகளாக இருக்கின்றன.
பெரியவர்களும் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மணிக்கணக்கில் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி விடுகின்றனர். ’எப்போது பார்த்தாலும் அவர் விளையாடிக் கொண்டே இருக்கிறார், எங்களிடம் பேசுவதே இல்லை!’ என்று பல வீடுகளில் மனைவி குற்றம்சாட்டுவதை நாம் கண்டிருக்கலாம். திரை பொழுதுபோக்குக்கு அவர்கள் அடிமையாவதுதான் முக்கியக் காரணம்.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பழக்கமாகிறோம், அடிமையாகிறோம் என்பதை ஆரம்பத்திலேயே ஒருவரால் உணர முடியுமா?
பன்னாட்டு நிறுவனங்களால் பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழிலாகத் தொடங்கப்படுபவை இந்த விளையாட்டுகள். அதில் இருந்து எத்தனை மடங்கு லாபம் எடுக்க முடியும் என்றுதான் அவர்கள் பார்ப்பார்கள். இதனால் யாரின் குடும்பம் கெட்டுப் போனால் என்ன என்று நினைப்பவர்கள்தான் அதிகம்.
இத்தகைய விளையாட்டுகளில் செயற்கை நுண்ணறிவுதான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. கணினி நிரல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 1000 இலக்க எண்களை, ஒரு நொடியில் பெருக்கும் வல்லமை வாய்ந்த கணினியுடன்தான் நாம் மோதுகிறோம் என்பதைப் பயனாளிகள் உணர வேண்டும். கணினியை வெல்லவே முடியாது என்பதை உணர வேண்டும். வெல்வதுபோல இருந்தாலும் அது தற்காலிகமானதுதான்.
காலையில் 8 மணிக்கு, மதியம் 2 மணிக்கு, இரவு 10 மணிக்கு எப்படி விளையாடுகிறீர்கள் என்பதையும் இயந்திரம் கண்காணிக்கும். அந்த இயந்திரத்தோடு போட்டிபோட்டு வெல்வேன் என்று சொல்பவர்களைவிடப் பெரிய முட்டாள் இந்த உலகத்திலேயே கிடையாது. ஆன்லைன் விளையாட்டு அடிமையாகிறோம் என்பதை உணர்வதற்குள், பலகட்டம் உள்ளே சென்றிருப்பார்கள் என்பதால், அத்தகைய விளையாட்டுகளை முற்றிலும் நிறுத்துவதுதான் நல்லது.
அதேபோல என் மகன் தினமும் 45 நிமிடங்கள் மட்டுமே விளையாடுகிறான்’ என்று சொல்லும் பெற்றோர்களும் உண்டு. ஆனால் அந்த விளையாட்டுகள் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க விடாது. அது குழந்தையின் கட்டுப்பாட்டிலும் இருக்காது. பெரியவர்களுக்கும், தாங்கள் விசித்திரமாக மாறிவருவது அவர்களுக்குத் தெரியாது. குடும்பம், நண்பர்கள், உடன் வேலை பார்ப்போர்தான் கண்டுபிடிப்பர். அதனால் ஆன்லைன் விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டோர், இன்று நிறுத்துகிறேன் என்று சொல்லி, இன்றே இப்போதே நிறுத்திவிடுங்கள்.
ஆன்லைன் விளையாட்டில் இருந்து மீள, அதை நிறுத்துவதுதான் ஒரே வழியா? வேறு என்ன செய்யலாம்?
அதுதான் ஒரே வழி. பதிலாக, ’விட்ட இடத்தில் இருந்துதான் மீண்டும் என் பணத்தை எடுப்பேன்!” என்று வீம்பு பிடிக்கக்கூடாது. பணத்தைத் தொலைத்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் சேர்க்க முயற்சித்தால், வாழ்க்கையையே தொலைக்க நேரிடும்.
வீடியோ கேம்களை விளையாடும்போது நம்முடைய உடலில் டோபமைன் (Dopamine) என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கிறது. உதாரணத்துக்கு நாய் துரத்தும்போது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு ஏற்படும். அத்தகைய பதற்ற நிலை விளையாடும்போதும் ஏற்படும். தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருக்கும்போது டோபமைன் சுரப்பு அதிகமாகி, உணர்வுவயமான சூழல் ஏற்படும். என்ன பேசுகிறோம், முடிவெடுக்கிறோம் என்பதை அறியாமலே அவர் தவறு செய்யத் தொடங்குவார்.
ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவோரைக் கண்டறியப் பொதுவான அறிகுறிகள் உள்ளதா?
3 வயதுக் குழந்தைக்கும் விளையாட்டுகள் வந்துவிட்டன. அதைத் தீவிரமாக விளையாடும் குழந்தைகளுக்குப் பேச்சே வராது. சாப்பிட மாட்டார்கள். அடம்பிடிப்பார்கள். தனிமையை விரும்புவார்கள். கண்கள் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பர்.
8- 10 வயதுக் குழந்தைகளுக்குக் கோபம் அதிகமாக வரும். திட்டுவார்கள், பிறரை அடிக்கத் தொடங்குவார்கள். டீன் ஏஜ் குழந்தைகள் சமூகத் தனிமையை விரும்புவர். வீட்டில் இருப்போருடன் அதிகமாகப் பேசமாட்டார்கள். தூக்கம், விளையாட்டு இரண்டுமே அதிகம் இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையே இருக்காது.
Massively multiplayer online games என்று அழைக்கப்படும் பப்ஜி மாதிரியான விளையாட்டுகள், விளையாடுவோரை வேட்டைக்காரனாக, காவலராக, வீரராக உணர வைக்கும். விளையாட்டுக்காக மெய்நிகர் உலகத்தில் கத்தியால் குத்த ஆரம்பிப்போர், மெய்யான உலகத்தில் கத்தியை ஏந்த எவ்வளவு நேரமாகும்? இதனால் உண்மையான உலகத்துக்கும் ஃபேண்டஸி வாழ்வுக்கும் வித்தியாசம் தெரியாமல் போகும்.
இந்த மாதிரியான விளையாட்டுகளில் ஆண் குழந்தைகளுக்கு அதிக ஆர்வமும் பெண் குழந்தைகளுக்குக் குறைவாகவும் இருக்கும். எனினும் குறைவான எண்ணிக்கையில் உள்ள பெண் குழந்தைகள் இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாக அதிக வாய்ப்புகள் உண்டு.
இளைஞர்கள், வேலைக்குச் செல்வோருக்கு என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும்?
எவ்வளவுதான் சம்பாதித்தாலும் எனக்குப் போதவில்லை. குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டும். அவற்றை சமூக வலைதளங்களில் பகிர வேண்டும், லைக்குகளை அள்ள வேண்டும், பிரபலமாக மாற வேண்டும் என்று நிறைய இளைஞர்கள் நினைக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களில் கைநிறைய சம்பாதிப்போர்கூட, ’அதிகப் பணம், விரைவில் பணம்’ என்று யோசிக்கின்றனர்.
’விளையாட்டில் எனக்குத் திறமை உண்டு. அதன்மூலம் பணம் சம்பாதிப்பேன்’ என்று முடிவெடுக்கின்றனர். முதலில் பணம் நமக்கு வருவது போலத்தான் இருக்கும். போகப்போக அதே பணத்தைப் பலமடங்காகத் திரும்பி எடுத்துக்கொள்ளத் தெரியும். கடன்காரன் ஆக்கவும் தெரியும். இந்த விளையாட்டுகளில் வென்று யாரும் பணக்காரர்கள் ஆனதில்லை. ஆனால், எப்படி விளையாடுவது?, தந்திரமாகக் கையாள்வது எவ்வாறு? என்பதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு, பணம் சம்பாதித்தவர்கள் வேண்டுமானால் இருக்கிறார்கள்.
அமெரிக்க மருத்துவ சங்கம் விளையாட்டுகளுக்கு அடிமையாவதை டிஸ்ஆர்டர் என்றே வகைப்படுத்தி உள்ளது. நீங்கள் தவறு செய்துவிட்டீர்களா, குடும்பத்தினருடன் உண்மையை உடனடியாகச் சென்று சொல்லுங்கள். அன்றுடன் அந்தப் பழக்கத்துக்கு முடிவு கட்டுங்கள்.
’மீண்டும் மீண்டும் விளையாடி, வென்று காட்டுகிறேன்’ என்று சொல்லாதீர்கள். மது, புகை உள்ளிட்ட பழக்கங்களை வேண்டுமானால் படிப்படியாக நிறுத்துவது சரியாக இருக்கலாம். விளையாட்டுகளுக்கு அப்படியெதுவும் இல்லை.
நான் ஆன்லைனில் பணம் வைத்தெல்லாம் விளையாட மாட்டேன். இலவசமாகக் கொஞ்ச நேரம் பொழுதுபோக்குக்கு விளையாடிக் கொள்கிறேன் என்பவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது...
அப்படித்தான் உள்ளே நுழைவீர்கள். ஆனால் அந்தச் சுழல் உங்களை பணம் வைத்து விளையாடுமாறு இழுக்கும். ஒவ்வொருவரும் அவரவர் துறைசார்ந்து தினந்தோறும் சுமார் 10 மணி நேரங்கள் பணிபுரிய வேண்டியுள்ளது. இதைத்தாண்டி குடும்பத்துடன் குவாலிட்டி நேரம் செலவிட வேண்டாமா? வீட்டிலும் சில மணி நேரங்கள் விளையாட வேண்டுமா? இதனால் குடும்பத்தினருக்குக் கோபமும் வெறுப்பும் வரும். நம்முடைய வாழ்க்கை சுழற்சி மாறும்.
ஆன்லைன் சூதாட்டங்களில் அதீத ஆர்வத்துடன் இருப்பவரைக் குழந்தைகள் எனில் பெற்றோரோ, கணவன் என்றால் மனைவியோ கண்காணிக்க வேண்டுமா? குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும்?
யார் ஒருவர் 2 மணி நேரத்துக்கு மேல் விளையாடுகிறாரோ, அவர் அடிமையாகும் சூழலை நோக்கித்தான் செல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உடனடியாக அந்தச் செயலியை நீக்குங்கள் என்று அவரிடம் வலியுறுத்திச் சொல்லுங்கள். நிலைமை கையை மீறிப் போனபின், இறுக்கிப் பிடிப்பதில் எந்த பயனுமில்லை. முன்பெல்லாம் கேண்டி க்ரஷ், ஃபார்ம்வில் உள்ளிட்ட விளையாட்டுகளை நினைத்த அன்றே நிறுத்த முடிந்தது. ஆனால் இன்றைய விளையாட்டுகள் அப்படியில்லை.
சமூகத்தில் பொறுப்பான பதவியில், நல்ல நிலையில் வாழ்ந்துகொண்டிருப்போர் குற்றவாளிகளாக மாறும் தருணம் எந்தப் புள்ளியில் தொடங்குகிறது?
டோபமைன் ஹார்மோன் சுரப்புதான் முக்கியக் காரணம். மோசமாக உணர்வுவயப்படும் நிலை ஏற்படும். எப்போது கோபப்பட வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடே அவர்களுக்கு இருக்காது. உடனடியாகக் கோபப்படுவர். அத்தகைய சம்பவம்தான் அண்மையில் வங்கி ஊழியர் விவகாரத்தில் பேட்டால் அடித்துக் கொலை செய்ததும், தற்கொலை செய்துகொண்டதும் நடந்தது. இத்தகைய சம்பவத்தைத் தவிர்க்கவே, அவரின் மன சூழல் அறிந்து உளவியலாளரிடம் அழைத்துச் செல்ல அறிவுறுத்துகிறோம்.
மது, புகை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் வகைமையில் ஆன்லைன் விளையாட்டுகளையும் கொண்டுவரலாமா?
நிச்சயமாக. அதில் எந்த சந்தேகமும் இல்லை. 12 வயதில் உங்களின் மகன்/ மகள் மது அருந்தினால், புகை பிடித்தால் உங்களுக்கு எப்படி கோபம் வருமோ, அதேபோல ஆன்லைனில் விளையாடிக் கொண்டே இருந்தாலும் வரவேண்டும். எதைச் செய்தாலும் ஹார்மோன் மாற்றம் நிகழ்ந்து, மனரீதியான பிரச்சினைகள் உருவாகும்.
இந்திய மாணவர்கள் உலக அளவில் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர். உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில், இந்தியர்கள்தான் இருக்கின்றனர். இதனால் இந்திய மாணவர்களைக் குறிவைத்தே பன்னாட்டு நிறுவனங்கள் ஆன்லைன் சூதாட்டங்களை உருவாக்குகின்றன. இதனால் விளையாடுவோரின் மூளை மழுங்கடிக்கப்படுகிறது. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நிறைய நாடுகளில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய காலகட்டத்தில் குறிப்பாக கோவிட் சூழலில், கேட்ஜெட்டுகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது. இதைத்தாண்டி என்னென்ன மாற்றுகளில் கவனம் செலுத்தலாம்?
குழந்தைகளை வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லலாமே. ஏன் அதை யாருமே யோசிப்பதே இல்லை? பாத்திரம் கழுவ, வாஷிங் மெஷினில் துணி துவைக்கக் கற்றுக்கொடுக்கலாம். குழந்தைகளுடன் சேர்ந்து நீங்களும் செய்யுங்கள். கடைக்குப் பொருட்கள் வாங்கி வர அனுப்புங்கள். வீட்டு அலமாரியை அடுக்கக் கற்றுக்கொடுங்கள். விளையாட்டு, உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
கொரோனா காலத்தில் மொபைலை, இணையத்தைக் கையில் கிடைத்த பொக்கிஷமாகக் கருதிப் பயன்படுத்தும் அரசுப் பள்ளிக் குழந்தைகளைக் கண்டிருக்கிறேன். இணையத்தையே தகவல் களஞ்சியமாகக் கருதிப் படிக்கலாம்.
ஆன்லைன் விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டோருக்கு என்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன?
Cognitive Behavioral Therapy (CBT), Habit Replacement Therapy உள்ளிட்ட சிகிச்சைகளை அளிக்கிறோம். கவனச் சிதறலைக் குறைக்க மூச்சுப் பயிற்சிகள், ரிலாக்ஸ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பதற்றம் அல்லது மன அழுத்தம் என என்ன பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சைகள் அளிக்கிறோம்.
விளையாட்டு என்னும் போதையில் இருந்து 3 நாட்களில் மீண்டவர்களும் இருக்கிறார்கள். 3 மாதத்தில் மீண்டவர்களும் இருக்கிறார்கள். அது குடும்பம் எந்த அளவு அவருக்கு ஆதரவாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. இதில் எந்த அளவுக்கு அடிமையாக இருந்தாலும் 100 சதவீதம் முழுமையாக விடுபடலாம்.
இவ்வாறு கல்வி உளவியலாளர் மருத்துவர் சரண்யா ஜெயக்குமார் தெரிவித்தார்.