நீலகிரி மாவட்டத்தில் 4 பேரை அடித்துக்கொன்ற புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். புலி தற்போது பதுங்கியுள்ள முதுமலை சரணாலய பகுதியில் இருந்து, கோயம்புத்தூர் வன விலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த முருகானந்தம் நமது ஏபிபி நாடு நிருபர் பிரசாந்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது, “ அந்த புலியின் பெயர் எம்.டி.டி.23. தேவன் எஸ்டேட்டில் இருந்தபோது இந்த புலி தனியாகாத்தான் இருந்தது. அங்கே இருந்தபோது இந்த புலியை எளிதாக கண்காணிக்க முடிந்தது. 23 புலி அங்கிருந்து பயணித்து தற்போது முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு வந்துள்ளது. முதுமலை சரணாலயம் புலிகள் மறைந்து வாழும் அளவிற்கு புதர்மண்டி காணப்படும் சரணாலயம் ஆகும்.


புலிகள் மனிதனின் கண்ணுக்கு அகப்படாமல், எந்தளவிற்கு மறைந்து வாழ முடியுமோ அந்தளவிற்கு புதர்களில் வாழும். முதுமலை சரணாலயம் அந்த புலிக்கு சாதகமாக உள்ளது. மற்ற புலிகளும் இந்த பகுதியில் உள்ளது. எம்.டி.டி23 புலியை பார்த்தாலுமே உடனே மயக்க மருந்தை செலுத்த முடியாது. இங்கே நிறைய புலிகள் இருப்பதால் அது இந்த எம்டிடி23 புலிதானா என்பதை உறுதி செய்த பிறகே மயக்க மருந்து செலுத்த முடியும். மழை தொடர்ந்து பெய்வதால் தேடுதல் வேட்டை சிரமமாக உள்ளது. புலி அங்கே இருந்தபோது வனத்துறையினருக்கு அட்டைப்பூச்சியின் தொல்லை அதிகளவில் இருந்தது. தற்போது முதுமலை சரணாலயத்தில் அந்த தொல்லை இல்லை.




அந்த புலி அடிக்கடி இடம்மாறி வருகிறது. இன்று ஒரு மாட்டை அந்த புலி அடித்துள்ளது. அதனால், மீண்டும் மாட்டை அடிப்பதற்கு புலி வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதியில் பரண் அமைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஒரே சரகத்திற்குள் 4 அல்லது 5 புலிகள் இருப்பதால், புலியின் கால்தடம் கிடைத்தால் அது எம்டிடி23 புலியின் கால்தடம் என்பதுதானா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உறுதி செய்வதற்கு நேரம் எடுப்பதால் புலியை பின்தொடர்வதில் காலதாமதம் ஏற்படுவதுடன், குழப்பமும் ஏற்படுகிறது.


இந்த புலிக்கு 13 வயதாகிவிட்டதால் அதன் வேகம் குறைந்துள்ளது. இதனால், இரண்டு நாட்களுக்குள் புலியை பிடித்துவிடுவோம். கண்டிப்பாக இந்த புலியை ஆட்கொல்லி புலியாக மாறிவிட்டதாக கூற முடியாது. காசிரங்காவில் தேன் எடுக்க மனிதர்கள் செல்லும்போது பின்பக்கத்திலும் முகம் தெரியுமாறு முகமூடி அணிந்து செல்வார்கள். ஆனால், உட்கார்ந்தோ அல்லது குனிந்தோ இருக்கும்போது புலி தனக்கான உணவாகத்தான் கருதும். ஒரு ஊருக்குள்ளோ அல்லது குடியிருப்புக்குள்ளோ வந்து மனிதர்களை தாக்கினால் மட்டுமே அதை ஆட்கொல்லி புலி என்று கூற முடியும்.




தேவன் எஸ்டேட்டில் இருந்து சுமார் 25 கி.மீ. வரை இந்த புலி பயணித்துள்ளது. அப்போது ஏற்பட்ட பசியின் காரணமாக புலி நான்காவதாக தாக்கிய நபரை சாப்பிட்டுள்ளது. அதற்கு முந்தைய மூன்று பேரையும் தாக்கத்தான் செய்தது. இந்த புலியை மயக்க மருந்து செலுத்திதான் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் உள்ளனர். அதே நேரத்தில் தற்போதைய சூழ்நிலை என்னவென்பதை நீதிமன்றமும் சற்று ஆய்வு செய்ய வேண்டும்.


இன்று கர்நாடகம், சத்தியமங்கலம், கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து மோப்பநாய்கள், 2 கும்கி யானைகள் வந்துள்ளன. மேலும், கர்நாடகம் மற்றும் கேரள வனத்துறையில் இருந்தும் ஆட்கள் வந்துள்ளனர். தற்போது புலியை பிடிக்கும் குழுவினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் புலியை விரைவில் உயிருடன் பிடித்துவிடுவார்கள்.




எம்.டி.டி23 புலியை பிடிப்பது உண்மையில் ஒரு சவாலான விஷயம். அந்த புலி ஒரு அறிவார்ந்த புலியாகவே காணப்படுகிறது. இந்த புலியை பிடிப்பதற்கு 7 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. 7 கூண்டிலும் அதற்கு பிடித்த உணவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கூண்டின் அருகில் வந்து உணவைப் பார்க்கும் புலி எந்த கூண்டிலும் சிக்கவில்லை.


2016ம் ஆண்டு முதல் இந்த புலியை கண்காணித்து வரும் வேட்டைத் தடுப்பு காவலர்களே இந்த புலி கூண்டில் நிச்சயம் சிக்காது என்று கூறுகின்றனர். வனப்பகுதியில் ட்ரோன்கள் மூலமாகவும், புலியின் கால்தடம் மூலமாகவும் தொடர்ந்து தேடி வருகின்றனர். முதுமலை அணியும், கேரள அணியும் கவச உடை அணிந்து புலியை தீவிரமாக தேடி வருகின்றனர். உயிரைப் பணயம் வைத்து வனத்துறை பாடுபட்டு வருகிறது.”


இவ்வாறு அவர் கூறினார்.