முதலமைச்சரின் சாதனைக்கு நற்சான்றிதழ் வழங்கும் வகையில் தேர்தல் முடிவுகள் வந்துள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், முன்னிலை வகித்து வருகிறார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் எண்ணம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் ஏபிபி செய்தியாளருக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில், “முதலமைச்சரின் சாதனைக்கு நற்சான்றிதழ் வழங்கும் வகையில் தேர்தல் முடிவுகள் வந்துள்ளது.  20 மாதங்களில் கொண்டு வந்த சாதனை திட்டங்களும், இன்னும் 20 ஆண்டுகள் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளார்கள்.


இது ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் எண்ணம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது. நாங்களும், எதிர்க்கட்சிகளும் சொன்னதை மக்கள் உன்னிப்பாக கவனித்தார்கள். அதில் எந்த பக்கம் உண்மை இருக்கிறது எனத் தெரிந்து மக்கள் வாக்களித்துள்ளார்கள்.


இது நாங்கள் எதிர்பார்த்த வெற்றிதான். திமுகவை பொருத்தவரை வெற்றி என வந்தால் வெறி கொண்டு அலைவதும் கிடையாது. தோல்வி என வந்தால் துவண்டு போவதும் கிடையாது. எதிர்கட்சியினர் தோல்விக்கான காரணத்தை தேர்தல் நாளான்றே பட்டியலிட ஆரம்பித்து விட்டார்கள். ஜெயித்து விட்டோம் என்பதால் தோற்றவர்களை பரிகாசம் செய்வதோ, கேலி கிண்டல் செய்யவோ மாட்டோம். 


மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என செயல்படுகிறோம். இந்த தேர்தலில் நமக்கு ஓட்டு போடாதவர்கள் மனதை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முதலமைச்சர் இருப்பார். வாக்களிக்காத மக்களின் மனதை விரைவில் வெல்வோம். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்டியம் கூறும் நிகழ்வாக இந்த தேர்தல் இருக்கும்” என தெரிவித்தார்.