அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் அதிமுக சட்ட திட்ட விதி படி, அதிமுக உட்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும்.


கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக பொதுக் குழுவில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவியையும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் என சட்ட விதி 20 (அ) திருத்தியமைக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் மீண்டும் சட்டவிதி 20 (அ) மாற்றி அமைத்து, கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால் இனி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.




அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. டிசம்பர் 7 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் வேட்பு மனு தாக்கல் நாளை மாலை 3 மணிக்கு நிறைவடைகிறது. மனுக்கள் 5-ம் தேதி காலை பரிசீலிக்கப்படும் என்றும் 6-ம் தேதி மாலை 4 மணிவரை மனுவை திரும்ப பெறலாம் என்றும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. டிசம்பர் 7 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை நடத்தி, தேர்தல் முடிவு டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதைத்தொடர்ந்து நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்கின்றனர்.  


இதனிடையே “அனைத்து தொண்டர்களும் கவலையின்றி இருங்கள். எவ்வித காரணமும் இல்லாமல் உதாசீனம் செய்யப் பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், தாங்களாக ஒதுங்கி செயல்படாமல் இருப்பவர்கள் அனைவரும் சிறிது காலம் பொறுத்திருங்கள்.மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள். விரைவில், அ.தி.மு.க., நிலை மாறும்; தலை நிமிரும்; இது உறுதி.எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும், அவற்றை தகர்த்தெறிந்து, என் உயிர்மூச்சு உள்ளவரை கட்சியை காத்து, தொண்டர்களின் இயக்கமாக மாற்றும் வரை நான் ஓய்ந்து விட மாட்டேன்” என சசிகலா அறிக்கை விட்டு குண்டை தூக்கிபோட்டுள்ளார். 




இந்நிலையில் அதிமுகவின் அரசியல் நகர்வுகள் குறித்து பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசியபோது, “எம்.ஜி.ஆர் காலத்திலேயே அதிமுகவில் முக்கியமான சட்ட விதி ஒன்றை வகுக்கப்பட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்ய வேண்டும் எனக் கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் ஜெயலலிதா வந்த பிறகு பொதுக்குழு மூலமாகவே பொதுச்செயலாளரை தேர்வு செய்யலாம் என விதியை மாற்றியமைத்தார்கள். அதனடிப்படையில்தான் 2017 ஆம் ஆண்டு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் பொதுச்செயலாளர் என்ற பதவியையே நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை பொதுக்குழு மூலமாகவே இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் கொண்டு வந்தனர். 


ஆனால் இருவருக்குள் இருக்கும் முட்டல் மோதல்களால் தொண்டர்கள் மத்தியில் ஒற்றை தலைமை வேண்டும் என்பதை நோக்கி குரல் ஒலிக்கத்தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் வேண்டும் எனவும் செங்கோட்டையன் பேசியிருந்தார். இந்த சூழலில் சசிகலாவும் களத்தில் குதிருத்திருக்கிறார். இதனால் இருவரும் தங்கள் பதவிக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என அச்சத்தில் உள்ளனர். 


ஒபிஎஸ்க்கு சசிகலாவை கட்சிக்குள் இழுக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. இதனால் அச்சமடைந்த இபிஎஸ் தமக்கு ஒற்றை தலைமை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; இருக்கும் பதவி போய்விடக்கூடாது என்பதால் ஓபிஎஸ்சுடன் இணக்கமாக செல்ல முடிவெடுத்துள்ளார். சசிகலா கட்சிக்கு வந்தால் நமது செல்வாக்கு சரிந்துவிடும் என்பதால் இபிஎஸ் இந்த சமரச முடிவுக்கு வந்துள்ளார். அதனால்தான் இவர்களின் இருவரின் பதவிகளுகளை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுப்பார்கள் என விதியை திருத்தியுள்ளனர். இது இவர்களின் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக மட்டுமே தவிர கட்சி நலனுக்காக இல்லை. 




இது மிகவும் தவறான விஷயம். ஒரு தேர்தல் என்றால் தேவையான கால அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும் அடிப்படை உறுப்பினர்கள் யார் என்று சொல்லவில்லை. யாரெல்லாம் வாக்களிக்க முடியும் என்று தெரிவிக்கவில்லை. கீழ்தட்டில் இருந்துதான் மேல்தட்டிற்கு செல்ல வேண்டும். ஆனால் இவர்கள் 7ஆம் தேதி இவர்களுக்கான தேர்தலை நடத்திவிட்டு 13ஆம் தேதி கிளைச் செயலாளரிலிருந்து மாவட்டச் செயலாளர்கள் தேர்வு வரைக்கும் நடத்துகிறார்கள். அப்புறம் எப்படி அடிப்படை உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியும்? இது நடைமுறைக்கு புறம்பானது. கண் துடைப்புக்காக தேர்தலை அறிவித்துள்ளார்கள். ஒற்றை வாக்கு இரட்டை தலைமை என்று சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை பொதுக்குழுவில் ஒப்புதல் வாங்கிய பிறகே செயல்படுத்த முடியும். அதுவும் தவறாக உள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்துமே தவறான அணுகுமுறையாக உள்ளது. இவர்களின் சுயநலத்தால் ஏற்கெனவே அதிமுக 3 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இவை நீடித்தால் நகரத்தேர்தல்களிலும் அதிமுக தோல்வியடைய வாய்ப்புள்ளது. அடிப்படை உறுப்பினர்களை வைத்து தேர்தலை நடத்துவது நடைமுறையில் சாத்தியம் இல்லை.


சசிகலா எந்தமாதிரியான அணுகுமுறையை கையாளப்போகிறார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அதிமுக ஒற்றை தலைமையை நோக்கி பயணிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” எனத் தெரிவித்தார்.