நேற்று நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள கடற்பரப்பில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி கைது செய்து வருகிறது. அத்துடன் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் சுடப்படுவதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக தமிழக கடற்கரை மாவட்டமான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மீனவர்களே இந்த தாக்குதலுக்கு அதிக அளவு ஆளாகி வருகின்றன. இதற்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமென தமிழக மீனவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்த போதிலும் தற்போது வரை இதற்கு ஒரு உரிய தீர்வு இல்லாமல் தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது நடந்தேறி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இணப்பெருக்கத்திர்காக ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மீன் பிடி தடை காலம் முடிந்து ஜூன் 15 ஆம் தேதி ஆழ் கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றனர். ஒரு வார காலத்தில் இரண்டு முறை இலங்கை படையினர், தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்துள்ளனர்.
நேற்றைய முன் தினம், 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்றைய தினம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட 21 பேரும் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கைது செய்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்வதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய முன் தினம் மீனவர்கள் இலங்கைக்கு அருகில் உள்ள நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது படகில் பழுது ஏற்பட்டு பாறையில் சிக்கியுள்ளது. இந்தநிலையில் அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்களை கைது செய்தது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 30 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.