காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி ஒன்றியம் கொளப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தனக்கு சொந்தமான 85 சென்ட் நிலத்தினை சாலைப் பணிக்காக படப்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தானமாக பத்திரப்பதிவு செய்து அளித்துள்ளார். அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை கடந்த 2007 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருந்த ஈ.வி.பி பெருமாள்சாமி என்பவர் அரசு அதிகாரிகள் உதவியுடன் பட்டா மாற்றம் செய்து கொண்டுள்ளார். மேலும், தற்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தானம் அளித்த இடத்தில் பெருமாள்சாமி திருமண மண்டபம் கட்டி தொழில் செய்து ஆண்டு அனுபவித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.



இதுகுறித்து நிலத்தை தானம் வழங்கிய ராமகிருஷ்ணனின் மகன் பழனி, பலமுறை அரசு அதிகாரிகளிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த நில மோசடி விவகாரம் குறித்து ராமகிருஷ்ணன் மகன் பழனி தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அரசு பணிக்காக ஊராட்சி ஒன்றியத்திற்கு தானம் அளித்த நிலத்தை அரசு அலுவலர்கள் உதவியுடன் அ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் ஈவிபி. பெருமாள் சாமி, பட்டா மாற்றி மோசடி செய்துள்ளதாகவும், அவர் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார்.



 

இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் நில உரிமையாளர் மகன் பழனி தனது தந்தை அரசுக்கு தானம் கொடுத்த இடத்தை முறைகேடு செய்து அனுபவித்து வரும் அ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள்சாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும், அவரின் திருமண மண்டபத்தை அரசு பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும், தன்னை ஆள் வைத்து மிரட்டும் பெருமாள் சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து புகார் மனுவை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



இது குறித்து மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,  அரசுக்கு அளிக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான மனுவை பெற்றுள்ளதாகவும் அந்த மனுவின் அடிப்படையில் நபர் அளித்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார் . மேலும் உடனடியாக இந்த மனுவின் மீது விசாரணை நடத்துமாறு கோட்டாட்சியரிடம் உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 



கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணியின் பொழுது, போலி பட்டா மூலம் மோசடி செய்து அரசு நிலத்தை அரசுக்கே விற்று 200 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,  தானம் கொடுத்த இடத்தை அரசு அலுவலர்கள் உதவியுடன்  பட்டா மாற்றி  100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.