ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் வைப்புத் தொகை வைத்தவர்கள் தங்கள் தொகையை திரும்ப பெற மாவட்டங்கள் வாரியாக முகாம்கள் தேதிகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.


1678 கோடி மோசடி?


சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் 13 இடங்களில் கிளைகளை துவங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, 1,678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. அவ்வாறு வசூலித்த பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும்  வழக்குப்பதிவு செய்தனர். 


நிறுவனம் தரப்பு வாதம்


இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆரூத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர், ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். வங்கி கணக்குகள் முடக்கபட்டுவிட்டதால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பித்தர இயவில்லை என்றும், பணத்தை திரும்ப தர தயாராக இருப்பதாகவும் வாதத்தின்போது தெரிவித்திருந்தனர்.


இதனையடுத்து நிர்வாக இயக்குனர் ராஜசேகர் உட்பட 5 பேரையும் ஆகஸ்ட்  8ம் தேதி வரை  கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன், யாரிடமும் டெபாசிட் பெறக்கூடாது என ஆரூத்ரா நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார். டெபாசிட் தாரர்களுக்கு பணம் திருப்பி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு உதவியாக  மாவட்ட வருவாய் அலுவலரை நியமித்தும் உத்தரவிட்டு, பணத்தை திருப்பி வழங்கியது தொடர்பாக ஆகஸ்ட் 8 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.


டெப்பாசிட் தொகையை திரும்பப் பெறும் முறை


இந்நிலையில் முன்னதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தில் வைப்புத் தொகை செலுத்தியவர்கள், தொகை செலுத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலரிடம் டெப்பாசிட்களை திரும்பப்பெறுவதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 முதல் மாலை 5:45 மணி வரை  விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


மாவட்ட வாரியாக முகாம்கள்


இந்நிலையில், முன்னதாக ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் வைப்புத் தொகை வைத்த டெப்பாசிட்தாரர்கள் தங்கள் தொகைகளை திரும்பப்பெற முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு செப்டம்பர் 14ஆம் தேதி வரை மாநிலங்கள் வாரியாக வேறு வேறு தேதிக்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாநிலங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் மனுக்கள் செப்டெம்பர் 14ஆம் தேதிக்குப் பின் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.