ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவனத்தின் வைப்புதாரர்கள் பணம் செலுத்தியதற்கான ஆவணங்களுடன் சென்னை மாவட்ட வருவாய் அலுவலரை அணுகும்படி பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளை துவங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, 1,678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. அவ்வாறு வசூலித்த பணத்தை டிபாசிட் செய்தவர்களுக்கு திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆரூத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர், ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். வங்கி கணக்குகள் முடக்கபட்டுவிட்டதால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பித்தர இயவில்லை என்றும், பணத்தை திரும்ப தர தயாராக இருப்பதாகவும் வாதத்தின்போது தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து நிர்வாக இயக்குனர் ராஜசேகர் உட்பட 5 பேரையும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன், யாரிடமும் டெபாசிட் பெறக்கூடாது என ஆரூத்ரா நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார். டெபாசிட் தாரர்களுக்கு பணம் திருப்பி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழக உள்துறை செயலாளருக்கு உதவியாக மாவட்ட வருவாய் அலுவலரை நியமித்தும் உத்தரவிட்டு, பணத்தை திருப்பி வழங்கியது தொடர்பாக ஆகஸ்ட் 8 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தில் வைப்பீடு தொகை செலுத்தியவர்கள், தொகை செலுத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலரிடம் டெப்பாசிட்களை திரும்பப்பெறுவதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 முதல் மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்