ஆதவ் அர்ஜுனாவுக்கு அஜெண்டா இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் சந்தேகம் கிளப்பிய நிலையில், அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். விசிகவின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி தனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.


விசிகவில் இந்தாண்டின் தொடக்கத்தில் இணைந்தவர்தான் ஆதவ் அர்ஜுனா. புதிதாக கட்சிக்கு வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு எடுத்த எடுப்பிலேயே துணைப் பொதுச் செயலாளர் பதவி, அனைத்து மேடைகளிலும் இடம், அனைத்து முடிவுகளையும் அவரிடம் ஆலோசித்து எடுப்பது என்று அவருக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வந்தார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்.



திருமாவுக்கு பறந்த கடிதம்:


கடந்த சில மாதங்களாகவே, கூட்டணியில் இருக்கக் கூடிய திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் ஆதவ் அர்ஜுனா மீது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளே அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், அம்பேத்கர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில், மேடையில் விஜய்யை வைத்துக் கொண்டே திமுகவை அட்டாக் செய்து பேசினார் ஆதவ் அர்ஜூனா.


இதற்கு, திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. ஏற்கனவே, ஆதவ் அர்ஜுனா மீது திமுகவினர் கடும் கோபத்தில் இருந்தனர். இதையடுத்து, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும். இல்லை என்றால் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என விசிகவுக்கு திமுக அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின.


இப்படிப்பட்ட சூழலில், ஆதவ் அர்ஜுனாவை ஆறு மாதங்களுக்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தார் திருமாவளவன். கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகும் திமுகவை அவர் தொடர்ந்து சாடி வந்தார். ஆதவ் அர்ஜுனா, இப்படி பேசி வருவதை பார்த்தால் அவருக்கு ஏதோ செயல்திட்டம் இருப்பதுபோல் தெரிகிறது என திருமாவளவன் சந்தேகம் கிளப்பினார்.


தவெகவில் பெரிய பதவி:


இந்த நிலையில், கட்சியில் இருந்து முழுவதுமாக விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், விசிகவின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி தனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இல்லை என அவர் கூறியுள்ளார்.


விசிகவில் இருந்து விலகியுள்ள ஆதவ் அர்ஜுனா, அடுத்ததாக தவெகவில் இணைய வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. கட்சியில் தனக்கு பெரிய பதவி தரப்பட வேண்டும் என விஜய்யிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.