தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கால்தடம் பதித்தவர் நடிகர் விஜய். இவர் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி மென்மையாக தனது அரசியல் காய்களை நகர்த்தி வந்த சூழலில், கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலை கையில் எடுத்தார். 

Continues below advertisement

41 பேர் மரணம்:

திருச்சியில் தனது மக்கள் சந்திப்பை நடத்திய விஜய் அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல்லில் சிறப்பாக நடத்திய நிலையில், கரூர் பரப்புரை தவெக அரசியல் நிகழ்வில் கரும்புள்ளியாக மாறியுள்ளது. 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Continues below advertisement

இந்த துயர சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை உருவாக்கிய நிலையில், இந்த விவகாரத்தை தவெக கையாண்ட விதம் மக்கள் மத்தியிலும், தவெக-வின் தொண்டர்கள் மத்தியிலுமே மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சி அமைச்சர்கள், எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர். 

டெல்லியில் ஆதவ் அர்ஜுனா:

ஆனால், தவெக தலைவர் விஜய் 3 நாட்களுக்கு பிறகே தனது இரங்கல் வீடியோவை வெளியிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூற தவெக-வின் முக்கிய நிர்வாகிகள் யாரும் முன்வரவில்லை. புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல்குமார் மீது வழக்குகள் பதிவாகிய நிலையில் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், அருண்ராஜ் ஐஏஎஸ் என யாரும் களத்திற்கு முன்வராதது அக்கட்சியினர் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்கியது.

இந்த இக்கட்டான சூழலில், தவெக-வின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா டெல்லிக்குச் சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் அதிமுக - பாஜக கூட்டணியே இருந்தது. விஜய்யும் தான் வெளியிட்ட வீடியோவில் தனக்கு ஆறுதல் கூறிய அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறியிருந்தார். இதுவே கூட்டணிக்கான மறைமுக அச்சாரம் என்று பலரும் கூறியிருந்த நிலையில், தற்போது ஆதவ் அர்ஜுனாவின் டெல்லி பயணம் அதை வலுப்படுத்தியுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்:

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்க்கு அமித்ஷா அழைப்பு விடுத்தும், அவர் அந்த தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியது. பாஜக-வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று விஜய் கூறி வரும் சூழலில், கரூர் சம்பவத்திற்கு பிறகு அரசியல் காய்கள் வேறு திசையில் மாறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய்யின் நெருக்கடியான சூழலை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு அதிமுக - பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர காய்கள் நகர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனா டெல்லி பயணம் கூட்டணி வலையில் விஜய் வீழ்ந்துவிட்டார் என்பதையே உணர்த்துவதாக குறிப்பிடுகிறது. தனது தனிப்பட்ட அலுவல் பணிகள், கூடைப்பந்து விவகாரம் தொடர்பாகவே ஆதவ் அர்ஜுனா அங்கு சென்றதாக கூறப்பட்டாலும், டெல்லி பயணம் அரசியலை மையப்படுத்தியதாகவே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தளபதியின் முடிவு என்ன?

அமித்ஷா, நிர்மலா சீதாராமனைச் சந்திப்பதற்காகவே விஜய் தரப்பில் ஆதவ் அர்ஜுனா சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய் அதிமுக - பாஜக கூட்டணிக்குச் செல்வாரா? அல்லது பாஜக -வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்ற தனது கொள்கை முடிவில் திடகாத்திரமாக நீடிப்பாரா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.