தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு கரும்புடன் சேர்த்து 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு வழங்கி வருகிறது. இதன்படி 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 1,298 கோடி ரூபாய் செலவில் இந்தத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே அரசின் இந்தப் பொங்கல் பரிசுப் பொருட்களை மறுத்து அவற்றை அரசுக்கே திருப்பி அனுப்பி வருகின்றனர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர்.
பரிசுப் பொருட்களை மறுத்துத் திருப்பி அனுப்புவது ஒருவகையான எதிர்ப்பின் அடையாளம்தான் என்றாலும் இதனை அதிகாரபூர்வமாகவே செய்வதற்கான வழியும் உள்ளது. ஒருவர் அரசு தரும் பொருட்கள் தனக்கு வேண்டாம் என்றால், அதிகாரப்பூர்வமாகவே அவற்றை வேண்டாம் என மறுத்து எழுதித் தரலாம். இதற்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வழிவகை செய்கிறது. அதற்கான வழிமுறைகள் கீழ்கண்டவாறு..
உணவுப்பொருள் வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வதளமான https://consumer.tn.gov.in/ ல் அதற்கான படிவம் கிடைக்கப்பெறுகிறது.
வழிமுறைகள்:
அரசின் https://consumer.tn.gov.in/ என்கிற தளத்துக்குச் செல்லவும்.
அதில் Ration cards and Fair price shops என்கிற லிங்க்கை கிளிக் செய்யவும்.
அதற்குள் ரேஷன் அட்டை தொடர்பான பல்வேறு படிவங்களுக்கான லிங்க்குகள் இருக்கும்.
இந்த படிவங்களில் 7-ஆம் எண்ணில் இருக்கும் Family Card Application form என்கிற லிங்க்கை க்ளிக் செய்யவும்
படிவம் ஆங்கிலத்திலும் தமிழிலும் கிடைக்கப்பெறும்.
உங்களுக்கு எளிதான மொழியில் நீங்கள் படிவத்தைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
படிவத்தில் உங்கள் தாலுக்கா பெயர், உங்கள் கையெழுத்து, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை முக்கியம்.
விண்ணப்பம் செய்பவரின் பெயர், முழு முகவரி, குடும்ப அட்டையில் இருப்பது போன்று குடும்ப உறுப்பினர்களின் முழு விவரம் ஆகியவற்றை எழுத வேண்டும்.
இவற்றுடன், பழைய ரேஷன் கார்டை திரும்பத் தருவதற்கான சரண்டர் சான்றிதழ் மற்றும் பழைய கார்டை திரும்பத் தர வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை அல்லது சொத்து வரிக்கான ரசீது போன்ற ஏதேனும் ஒன்றை உங்கள் வீட்டு முகவரிக்கான சான்றாக அளிக்கலாம்.
உங்களது கேஸ் கனெக்ஷன் விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.
மிக முக்கியமாக அரசின் பரிசுப் பொருட்கள் வேண்டாம் என்னும் சூழலில் விண்ணப்பத்தில் 8வது பகுதியில் ‘Dont want any commodity' என்பதற்கு எதிராக டிக் செய்ய வேண்டும்.
இதற்குக் கீழே இடம் தேதி உள்ளிட்ட விவரங்களை நிரப்பி குடும்பத் தலைவர் தனது கையெழுத்தை இட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட இந்த விண்ணப்பத்தை உங்களது ரேஷன் கடையிலேயே அளிக்கும் நிலையில் உங்களது அரிசி கார்டு வெள்ளை அட்டை கார்டாக மாற்றித்தரப்படும்.
வெள்ளை அட்டை கார்டுகளுக்கு பரிசுப் பொருட்கள் தரப்படாது.