சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எல்லைச் சாலை திட்டம் எனும் பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை எல்லைச் சாலை திட்டம் 15 ஆயிரத்து 626 கோடி மதிப்பில் 132 கி.மீ தூரத்திற்கு அமைய உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவித்தனர்.


சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மாநிலத்தின் தெற்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்களை எண்ணூர் மற்றும் காட்டுப்புள்ளி துறைமுகங்களுடனும் அண்டை மாநிலங்களுடனும் இணைத்து அதன் மூலம் வணிகம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த சென்னை எல்லை சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.


 சென்னை எல்லைச் சாலையானது 132.87  கிலோமீட்டர் தூரத்திற்கு ஆறு வழி இரட்டை பாதையாக , இருபுறமும் இருவழி சேவை சாலைகளுடன் ரூபாய் 15,626 கோடி மதிப்பில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இச்சாலை திட்டத்தினால் பொதுத்துறை மற்றும் தனியார் வாகனங்களை பயன்படுத்தும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இத்திட்டம் சென்னை நகருக்குள் வாகன நெரிசலை குறைப்பது மூலம் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தற்போது வரை 550 கோடி செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னை மாநகரத்தில் பெரும்பாலான பகுதிகளில் peak hours அதாவது காலை மற்றும் மாலை வேளையில் போக்குவரத்து அதிகம் இருக்கும் நேரங்களில் மக்கள் ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்வது மிகவும் கடினமாக உள்ளது. இதனால் பெரும்பாலானோர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மெட்ரோ ரயில் வசதி இல்லாத பகுதிகளுக்கு செல்ல நினைக்கும் மக்கள் கட்டாயம் இருச்சக்கர வாகனங்கள் அல்லது பொது போக்குவரத்து பயன்படுத்தும் நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். குறிப்பாக் கிண்டி, சின்னமலை, மேடவாக்கம், அடையாறு, நந்தனம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை எல்லைச் சாலை திட்டம் மூலம் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.