வடகிழக்கு பருவமழை தீவிரம்
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களில் மழையானது கடந்த 4 நாட்களாக கொட்டி வருகிறது. இதனால் அணைகளுக்கான நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஏற்கனவே செம்பரம்பாக்கம், புழல் ஆகியவற்றில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது பூண்டி நீர்தேக்கத்தில் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. அந்த வகையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம் பூண்டி 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவில் 34,58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் டிட்வா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனையடுத்து பூண்டி அணையில் நீர்மாட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
பூண்டியில் தண்ணீர் திறப்பு
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இன்று (03.12.2025) பூண்டி சத்திய மூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 34.09 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2851 மில்லியன் கன அடியாகவும் (88.24%) உள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழையினால் பூண்டி சத்திய மூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகபடியாக உள்ளதால் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர் வரத்து 33 அடியை தொட்டுவிட்டதாலும், அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று 03.122025 காலை 08.00 மணி அளவில் வினாடிக்கு 200 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகும் நிலையில், உபரி நீர் வெளியேற்றம் கூடுதலாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம். கிருஷ்ணாபுரம். ஆட்ரம்பாக்கம் ஒதப்பை நெய்வேலி எறையூர், மேன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர். வெள்ளியூர், தாமரைப்பாக்கம். திருக்கண்டலம், ஆத்துர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம். புதுகுப்பம். கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம் அசூவன்பாளையம் மடியூர். சீமாவரம். வெள்ளிவாயல்சாவடி நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர். சடையான்குப்பம்.எண்ணுர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.