தூத்துக்குடியில் வாயில் சங்கிலி சுற்றப்பட்டு நாய் ஒன்று தவித்து வந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு அந்த சங்கிலியை வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே நாய் ஒன்று, வாயில் சங்கிலி சுற்றப்பட்டு உணவு அருந்த முடியாமல் தவித்து வந்தது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அப்பகுதி வழியாக வந்த அந்த நாய்க்கு பிஸ்கட் கொடுத்து அங்கேயே சிறிது நேரம் நிறுத்தி வைத்திருந்தனர்.
அப்போது அங்கிருந்தவர்கள் சாத்தான்குளம் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த நாயின் வாயிலிருந்த சங்கிலி மற்றும் பூட்டை அகற்ற முற்பட்டனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் வலியால் துடித்த அந்த நாயை பிடிக்க முடியாததால் அங்கிருந்த தீயணைப்பு வீரர் சங்கரலிங்கம் சமயோஜிதமாக செயல்பட்டு அந்த நாயின் பின்புறத்தில் சென்று நாயை அலேக்காக தூக்கி இரண்டு சுற்று சுற்றினார். அப்போது அங்கிருந்த மற்ற தீயணைப்பு வீரர்கள் அந்த நாயின் வாயை நைசாக பிடித்தனர். தொடர்ந்து அதன் வாயில் சங்கிலியால் இறுக்கமாக சுற்றப்பட்டு பூட்டுபோடப்பட்டிருந்த பூட்டு மற்றும் சங்கிலியை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.
அந்த நாயின் வாய் பூட்டை அகற்றியதால் சந்தோஷத்தில் துள்ளி குதித்து ஓடிய அந்த நாயை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் பிரமித்தனர். அதோடு மட்டுமல்லாது நாயின் வாய் பூட்டை அகற்றிய வீரர்களை அங்கிருந்த பொதுமக்கள் கைதட்டி பாராட்டினர்.
வீட்டில் நாயை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை...! வீட்டில் நாயை ஆசைப்பட்டு வளர்த்து விட்டு அது வளர்ந்த பின்னர் அதற்கு உணவளிக்க முடியாமலும், பார்க்க முடியாமலும் இதுபோல வாயில் சங்கிலியால் கட்டி, பூட்டால் இறுக்கமாக பூட்டி, இதுபோல சாலையில் விட்டு செல்லும் இரக்கமற்ற மனிதர்களின் செயலால் இதுபோல பல உயிர்கள் அன்னம், தண்ணீரின்றி உயிர் விட்டிருக்கின்றன. எனவே இதுபோல செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.