போராட்டாக்காரர்கள் வசம் இலங்கை :
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டு அதிபர் மாளிகைக்குள் லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் புகுந்து அதிபர் மாளிகையை தங்கள் வசமாக்கியுள்ளனர். இது உலக கவனத்தை இலங்கையின் பக்கம் திருப்பியிருக்கிறது. மக்களின் போராட்டத்திற்கு பயந்து அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச மாளிகையை விட்டு தப்பி ஓடியதாக செய்திகள் வெளியானது. மேலும் அவர் தனது பதவியை வரும் 13-ந் தேதி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டரில் வைரல் :
இந்த நிலையில் சமூக வலைத்தளங்கள் முழுவதும் இலங்கை அதிபர் மாளிகை முழுதும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. அப்படியான ஒரு வைரல் வீடியோவை அமெரிக்க பெண் ஒருவர் ஷேர் செய்து “வரலாறு முழுவதும் ஒவ்வொரு அரசர், பேரரசர், தன்னலக்குழு மற்றும் கொடுங்கோலரின் தொடர்ச்சியான கனவாக இருந்து வருகிறது. நமது முழு நாகரிகமும் அது எவ்வளவு எளிது என்பதை நாம் கவனிக்காமல் இருப்பதற்காக இதெல்லாம் கட்டமைக்கப்பட்டுள்ளது.” என பகிர்ந்திருக்கிறார்.
பி.டி.ஆர். தியாகராஜன் கருத்து :
ட்விட்டரில் அமெரிக்க பெண் பகிர்ந்த இலங்கை போராட்ட வீடியோவை ஷேர் செய்த தமிழக நிதித்துறை அமைச்சர் பி.தியாகராஜன் ,”கொடுங்கோலர்கள் எப்போதும் தங்கள் அழிவுக்கான விதைகளை விதைக்கிறார்கள்: சிறுபான்மையினர் மீதான வெறுப்பு மற்றும் அது சார்ந்த பிறரை வளர்ப்பது, vigilante கும்பல்களுக்கு அதிகாரம் அளித்தல், நிறுவனங்களை அடிபணியச் செய்தல் அல்லது அழித்தல் போன்றவை அதில் அடங்கும். தவிர்க்க முடியாமல் ஏற்படும் பொருளாதாரத் தோல்வியை தாங்க முடியாத போதுகுழுவே அதன் படைப்பாளரை இயக்கும்.” என தெரிவித்துள்ளார்.
விரைவில் புதிய அதிபர் :
முன்னதாக, இலங்கையில் அந்த நாட்டு அதிபர் மாளிகையை லட்சக்கணக்கான மக்கள் சூழ்ந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாட்டு காவல்துறையினரும், ராணுவமும் தடுமாறினர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை களைக்க முயற்சித்தனர். ஆனாலும், லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மேலும, காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் சிலர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் போராட்டம் வலுப்பெற்றது. கோத்தபய ராஜபக்ச மட்டுமின்றி ரணில் விக்கிரமசிங்கவும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நிலவி வரும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு அந்த நாட்டின் தற்காலிக அதிபராக அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்தயப்பா அபய்வர்தேன பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில், அவர் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.