1984 ல் ஆழ்வார்பேட்டை பீமண்ணா தெருவில் வீடியோ கடை நடத்தி வந்தார் சசிகலா. அப்போது சுப்பிரமணிய சுவாமியின் சகோதரியான ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மூலம் ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்து, அவரது நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஆர்டரை பெற்ற சசிகலா, பின்னாளில் அவரின் அன்பை பெற்று ஜெயலலிதாவின் நிழல் ஆனார். இத்தனைக்கும் பாலமாய் இருந்த ஒரே விஷயம் வீடியோ. அன்று ஜெயலலிதா-சசிகலாவை இணைத்தது வீடியோ. இன்று அதிமுகவை தன் தலைமையின் கீழ் இணைக்க உதவப்போகிறது ஆடியோ என நம்புகிறார் சசிகலா. தேர்தல் நேரத்தில் விடுதலையாகி, அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என அறிவிப்பு கொடுத்துவிட்டு, முடிவு வரும் வரை காத்திருந்து, இப்போது ஒதுங்கிய அவர் மீண்டும் உரிமை கோர புறப்பட்டுள்ளார். இந்த முறை அவர் கையில் எடுத்துள்ள ஆயுதம் ஆடியோ.




திடீரென மே 29-ஆம் தேதி சசிகலா பேசிய ஆடியோ இணையத்தில் வைரலானது. தொண்டரிடம் நலம் விசாரிப்பு என அன்றோடு கடந்துபோகுமா என்றால் ஆடியோ என்பதை பெரும் திட்டத்துடன் கையில் எடுத்திருந்தார் சசிகலா. இதுவரையில் 50க்கும் மேற்பட்ட ஆடியோவை கடந்து போயுள்ளார் சசிகலா. இந்த ஆடியோ ஆயுதம் வெறுமனே போனை டயல் செய்து போன்பேசும் சாதாரண விவகாரம் அல்ல. ஒரு டிஜிட்டல் வார் ரூமே சசிகலாவுக்கு வேலை செய்கிறது என்பதே சமீபத்தில் வெளியான தகவல். 


ஆடியோ, லெட்டர் என சின்ன ஆயுதத்தை கையில் எடுத்துள்ள சசிகலா பெரிய திட்டத்துடனே பயணிப்பதாக சொல்கிறது அமமுக பட்சி. நிகழ்கால அரசியலை தெரிந்துகொள்ளவும், அதிமுகவின் நகர்வுகளை புரிந்துகொள்ளவும் யூடியூப் சேனல்கள் சிலவற்றை ஃபாலோ செய்கிறாராம் சசிகலா. அதுபோல  தமிழகத்தின் பல்வேறு இடங்களிடம் இருந்து அதிமுக, அமுமுக பல தொண்டர்களின் கடிதமும், கூரியரும்  ஒருநாளைக்கு 50-க்கு குறையாமல் சசிகலாவை தேடி தினம் தினம் வருகிறதாம். அதுபோக 70 முதல் 80 போன்கால்களால் அதிர்கிறதாம் சசிகலா வீடு. இதெல்லாம் போக, தினமும் 25 முதல் 30 தொண்டர்களிடம் தொலைபேசி மூலம் சசிகலா பேசுகிறார்.




இது குறித்து கசிந்த தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினமும் காலை 6.30 மணி முதல் தொண்டர்களின் போன் கால் வரத்தொடங்கும். அது காலை 10 மணி வரை தொடரும்.  பின்னர் காலை உணவுக்கு பிறகு சசிகலா தனது ஓய்வு நேரத்தை கூறுவாராம். அதன் பின்னரே தொண்டர்களுக்கு தொலைபேசி அழைப்பு செல்கிறது. அதற்கு முன்னதாகவே எந்த தொண்டரிடம் பேசப்போகிறோம், கட்சிக்கும் அவருக்குமான தொடர்பு போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு ரெடியாக இருக்கும். இப்படி சரியான திட்டமிடலுடன் சசிகலா காய்நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.


தனக்கான தகவல்களை நாளிதழ்கள், டிவி, யூ டியூப் சேனல்கள் மூலம் திரட்டிக்கொள்ளும் சசிகலா யார் யாரிடம் என்னென்ன பேச வேண்டும் எனவும் தயாராகியே போனை கையில் எடுக்கிறாராம். ஆனால் அவர் யாரிடம் பேசினாலும், 'ஓபிஎஸ், இபிஎஸ் கட்சியை வழிமாற்றிச்சென்றுவிட்டனர்', 'ஜெயலலிதா, எம்ஜிஆர் வழிநடத்திய கட்சி இன்று தடம் மாறி செல்கிறது', 'தான் நிச்சயம் வருவேன்' என்ற மூன்று சாராம்சங்களை கொண்டதாகவே இருக்கிறது.




ஈபிஎஸ் கோட்டையான எடப்பாடியில் இருந்தும், ஓபிஎஸ் கோட்டையான தேனி பக்கத்தில் இருந்தும் கூட அழைப்புகள் வந்து குவிந்து வருவதாக சொல்கிறார் சசிகலா தரப்பைச் சேர்ந்த ஒருவர். நாமக்கல், திருப்பூரில் இருந்து அதிகளவில் அழைப்புகள் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொங்கு பெல்ட் அதிமுகவின் கோட்டை என்றாலும் இன்று வரும் அழைப்புகளும் அங்கிருந்துதான் அதிகம் என்கிறது அமமுக வட்டாரம். குறிப்பாக குறை என்றால், எஸ்பி வேலுமணி மீதும், தங்கமணி மீதும்தானாம். இருவரின் மீதும் புகார்கள் குவிகிறதாம். அனைத்தையும் காது கொடுத்து கேட்டுக்கொண்டு இருக்கும் சசிகலாவின் அடுத்த நகர்வு என்ன என்பதைத் தான் தமிழக அரசியல் களம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.