தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டதற்கு தமிழக அரசு சார்பில் அரசாணையும் வெளிிடப்பட்டது.
இந்த நிலையில், பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வலிறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்துள்ள மனுவில், நீட் விவகாரத்தில் மாநில அரசு அரசியலாக்கி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், நீட் குறித்த தெளிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாடு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்று தெரிவித்துள்ளார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவில், தமிழக அரசு சார்பில் விளக்கம் அளித்த தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் நீதிபதிகள், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படும் நிலையில், நீட் தேர்வை பாதிக்கும் வகையில் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டிருக்கிறதே அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் ஆளுங்கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலே நீட் தேர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொள்கை முடிவை எடுக்கவே தமிழக அரசு இந்த குழுவை அமைத்துள்ளது என்றும் கூறினார். இதுகுறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
தமிழக மாணவர்களின் நலன் கருதியே தி.மு.க. அரசு, நீட் தேர்வு குறித்து ஆராய குழு அமைத்துள்ளது. ஆனால், அ,தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. ஆய்வுக்குழுவிற்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குத் தொடர்ந்துள்ளது. இது தமிழக மாணவர்களின் நலனை குழிதோண்டி புதைக்கிற செயல். எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள பா.ஜ.க. இரட்டை நிலைப்பாடுடன் உள்ளது. சட்டசபையில் ஆதரவும், வெளியில் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். நீட் தேர்வு குறித்து தெளிவான முடிவை அவர்கள் அறிவிக்க வேண்டும். நீட் தேர்வில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு பற்றி அ.தி.மு.க. கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிக்க வேண்டும். உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது கருத்துதானே ஒழிய, தீர்ப்பு அல்ல” இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் நீட் தேர்விற்கு பெரும்பலான கட்சிகளும், பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.