சென்னை வானகரத்தில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்-ஐ தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்,  அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு, அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அதேபோல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத்தலைமையும் ரத்து செய்யப்பட்டது. இது ஒருபுறம் நடக்க, பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே அதிமுக அலுவலகத்துச் சென்றார் ஓபிஎஸ். கல்வீச்சு, அடிதடி என இரு தரப்பு ஆதரவாளர்களும் சண்டையிட்டுக்கொண்ட நிலையில் அதிமுக அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டது.

Continues below advertisement

ஒருபக்கம் ஈபிஎஸ்க்கு பதவி , ஓபிஎஸ்-ன் பதவி பறிப்பு என பொதுக்குழு நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் தான் வந்த வாகனத்தில் ஆவணங்கள் அனைத்தையும் அதிமுக அலுவலகத்தில் இருந்து ஏற்றினார் ஓபிஎஸ். அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஏற்கெனவே ஓபிஎஸ் இருந்த நிலையில் அவர் எடுத்துச்சென்ற ஆவணங்கள் முக்கிய கோப்புகளாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. 

Continues below advertisement

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கொள்ளை அடித்ததாக ஓ.பன்னீர்செல்வம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுகவின் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் புகார் மனுவை அளித்துள்ளார்.

ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவின் ஆவணங்களை அவருடைய ஆதரவாளர்கள் கொள்ளையடித்து சென்றதாகவும், இதற்கு வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ்பாண்டியன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கலவரத்தில் ஈடுபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான ஆயிரம் விளக்கு பகுதிசெயலாளரான பாலச்சந்திரன் ( வயது 34), திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் சீனிவாசன் ( வயது 40), 171வது வடக்கு வட்ட கழகச்செயலாளர் கார்டன் செந்தில் ( வயது 40) மயிலாப்பூர் பகுதி இணைச்செயலாளர் தினேஷ் ( வயது 36), 113வது வட்ட உறுப்பினர் மார்க்கெட் சுந்தர் ( வயது 33), சேப்பாக்கம் மாவட்ட பிரதிநிதி கார்த்திக் ( வயது 38), 120வது கிழக்கு வட்டதுணைச் செயலாளர் முரளிகிருஷ்ணன் (வயது 30), விருகம்பாக்கம் வடக்குபகுதி கழக பொருளாளர் விநாயகமூர்த்தி (வயது 46), விருகம்பாக்கம் 128வது வட்ட அவைத்தலைவர் செல்வம் (வயது 58), திருவல்லிக்கேணி இளைஏஞர் பாசறை துணைச்செயலாளர் லோகேஷ் (வயது 26) கோடம்பாக்கம் 112வது வட்ட மேலவை பிரதிநிதி பாபு, (வயது 62), 112வது வட்ட அவைத்தலைவர் குட்டி (வயது 48), 120வது மேற்கு வட்ட செயலாளர் வின்சென்ட் ராஜ் (வயது 38), 111வது வட்ட கழகச் செயலாளர் சால்னா சேகர் (வயது 52) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.