மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னையில் பல்வேறு பகுதில் வெள்ளி நீரில் மூழ்கியது. மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, மணலி உள்ளிட்ட வட சென்னை பகுதிகள் என பல பகுதிகளில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அடிப்படை வசதி கூட இல்லாமல் தவித்து வந்தனர். வெள்ள நீரை அகற்றும் பணிகள் அரசாங்கம் மற்றும் தன்னார்வள தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்தினர். உடைமைகளை இழந்து தவித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கரையோரம் வசித்த மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


அதுமட்டுமின்றி இதில் ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் பழுதடைந்துள்ளது. இதற்கிடையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பர் 7 ஆம் தேதி சென்னை வந்தார். ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் சூழ்ந்த இடங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்தார்.


இதனிடையே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதல் கட்ட நிவாரணமாக ரூ.5060 கோடி வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தினார். மத்திய அரசும் ரூ.450 கோடி வழங்குவதாக அறிவித்தது. இந்நிலையில் புயல் பாதிப்பை பார்வையிட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு நேற்று மாலை 4 மணிக்கு சென்னை வந்தனர். 


இந்த குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை (செலவினம்), மின்சாரத்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.


நேற்று மாலை சென்னை வந்த மத்திய குழுவினர் இன்றும் நாளையும், இரண்டு பிரிவுகளாக பிரிந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் பாதிக்க்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர். பாதிப்புகளை பார்வையிட்ட பின் அதற்கான விரிவான அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்படும். அதன் பின் தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 


இப்படி இருக்கும் சூழலில், ஒரு சில பகுதிகளில் இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  சென்னையை ஒட்டுமொத்தமாக வெள்ளம் புரட்டி போட்டதில் அரசும், மக்களும் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டதில் உயிர்ச் சேதம் என்பது பெருமளவு தவிர்க்கப்பட்டது. ஆனால் பொருட்சேதம் என்பதை தவிர்க்க முடியவில்லை. 


மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.   இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம்.  அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையடுத்து தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வரும் 16 ஆம் தேதி முதல் நிவாரண நிதிக்கான டோக்கன்கள் வழங்கப்படும் பணி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். 


Article 370 : 370 சட்டப்பிரிவு செல்லுமா? ஜம்மு காஷ்மீர் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்..