சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவரான அப்துல் ரஹீம் கடந்த 13 ஆம் தேதி பணியை முடித்து கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் வழியாக வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தி முககவசம் அணியாமல் சென்றதாக வழக்குபதிவு செய்து அபராதம் செலுத்துமாறு கேட்டனர். அப்போது ரஹீம் முககவசம் அணிந்திருப்பதாக கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலர் உத்திரகுமாரின் கண்ணத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. உடனே போலீசார் ரஹீமை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
இதனையடுத்து கொடுங்கையூர் போலீசார் இரவு முழுவதும் தன்னை நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தியதாக ரஹீம் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இரவு முழுவதும் பைப் மற்றும் பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்து காயப்படுத்தியதாகவும், சாதி ரீதியாக அசிங்கபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பீரோவில் தலையை இடித்து காயப்படுத்தி தன் மீது சிறுநீர் அடிக்க காவலர்கள் முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தன்னை தாக்கிய எம்.கே.பி நகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நசீமா , கொடுங்கையூர் காவல் நிலைய காவலரான உத்திரகுமார் , ஹேம நாதன் , சத்தியராஜ் , ராமலிங்கம் , அந்தோணி , தலைமை காவலர் பூமி நாதன் உட்பட 9 காவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரஹீம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ரஹீமை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் குற்றச் சாட்டுக்கு உள்ளான தலைமை காவலர் பூமி நாதன் மற்றும் முதல் நிலை காவலர் உத்திரகுமார் ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். மேலும் காவல் ஆய்வாளர் நசீமா உட்பட கொடுங்கையூர் காவலர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தன்னை தாக்கியதாக அப்துல் ரஹீம் அளித்த புகாரில் காவல் ஆய்வாளர் நசீமா, கொடுங்கையூர் காவலர் உத்திரகுமார், ஹேம நாதன், சத்தியராஜ், ராமலிங்கம், அந்தோணி, தலைமை காவலர் பூமி நாதன் உட்பட 9 காவலர்கள் மீது கொடுங்கையூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது ஆபாசமாக திட்டுதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு ஆர்டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ கண்ணப்பன் இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பினரிடமும் ஆர்டி.ஓ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்