இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிரித்துள்ள நிலையில் இது தென்னிந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவுக்கும் என தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் இலங்கைக்கான சீனத்தூதர் இலங்கையில் இருந்து படகு மூலம்  பருத்தித்துறை வரை வந்து இங்கிருந்து இந்தியா எவ்வுளவு தூரம் என கேட்டு சென்ற நிகழ்வு செய்திகளில் வெளியாகி விவாத பொருளாகின. இந்தியாவில் தமிழ்நாடு மிக நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாகவும், இலங்கைக்கு மிக அருகில் உள்ள இந்திய பகுதியாகவும் இருக்கும் நிலையில் தமிழக கடலோர எல்லையை பாதுகாக்க மத்திய அரசு முக்கியத்துவம் காட்டி வருகிறது.




 


 


தமிழக கடல் எல்லை பகுதிகளை பலப்படுத்தும் விதமாக மத்திய அரசின் பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள சுமார் 456 கிலோ மீட்டர் சாலையை 4 வழிச்சாலையாக மாற்றி தேசிய நெடுஞ்சாலை எண் 32 என்று பெயரிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த சாலையில் முக்கிய இடங்களில் ராணுவ விமானங்களை தரையிறக்கும் வகையில் விமான ஓடுதளங்களை அமைப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.


இந்தியாவில் ஏற்கெனவே ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ராணுவ விமானங்களை தரையிரக்கும் வகையிலான விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இது மாதிரியான விமான ஓடுதளங்களில் வட இந்தியாவுக்கு பிறகு தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் முதன் முறையாக அமைக்கப்படுகிறது. இச்சாலையை சாலை எல்லை பாதுகாப்புக்கு மட்டுமின்றி கடற்கரையோர தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் துறைமுகங்களை இணைத்து சரக்கு போக்குவரத்தை  அதிகரிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது. 




இதன் அடிப்படையில் நாகப்பட்டினம் - கன்னியாகுமரி இடையிலான வழித்தடத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இச்சாலை தூத்துக்குடி மாவட்டத்தில் தனியாக 60 அடி சாலையாக அமைகிறது. மேலும் கிழக்கு கடற்கரை சாலை, தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் இடத்தில் பறக்கும் சாலை போன்று பட்டர்பிளை வளைவு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


இதை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை துறை மண்டல அலுவலர் சிவாஜி நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் பட்டர்பிளை வளைவு அமைய உள்ள பகுதி, உடன்குடி அனல்மின்நிலையம் பகுதி, இஸ்ரோ அமைய உள்ள பகுதியில் சாலையை எவ்வாறு அமைப்பது, மற்றும் விளைநிலங்கள் குடியிருப்புகளுக்கு பாதிப்பு இல்லாமல் சாலை வழித்தடம் அமைகிறதா என்பது குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 




இதை தொடர்ந்து தூத்துக்குடியில் தனியார் ஓட்டலில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன்  மண்டல அலுவலர் சிவாஜி சாலை பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். பெரும்பாலும் கடற்கரையை ஒட்டி உப்பளம் வழியாக சாலை அமையும் வகையில் வழித்தடம் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. .