வாழும் சமூகத்தில் ஆண், பெண் என இரு பாலினத்தை கடந்து மூன்றாம் பாலினமாக திருநங்கை, திருநம்பியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எவ்வளவு தான் படித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திட்டாலும் மக்கள் இவர்களை பார்க்கும் பார்வை மறுபட்டதாகவே இருந்து வருகிறது. 


கல்வி, விளையாட்டு, அரசு அதிகாரிகள் என இவர்களின் முன்னேற்றம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்துகொண்டே செல்கிறது. இந்தநிலையில், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மூலம் ஒரு செய்தியானது வெளியுலகிற்கு வந்துள்ளது. சென்னையை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்து வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தனது உடலளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்துள்ளார். 


இதன் காரணமாக, தனக்கு பிறந்த 2 மகன்களிடம் தன்னை இனி அம்மா என்று அழைக்கக்கூடாது அப்பா என்றே கூப்பிட வேண்டும் என்று தெரிவித்து தனது பெயரையும் கவின் என்று மாற்றிக்கொண்டுள்ளார். மேலும், தனது மாற்றம் குறித்து கணவரிடம் கூற சில காலங்கள் அவரும் அதனை ஏற்றுக் கொண்டு இருவரும் நண்பர்கள் போல் பழகி வந்துள்ளனர். தொடர்ந்து, இந்த சமூகம் இவரின் மாற்றத்தை கண்டு வெறுப்பை வெளிப்படுத்தவே, இருவரும் விவாகரத்து கேட்டு கடந்த 2019 ம் ஆண்டு நீதி மன்றத்தை நாடி விவகாரத்து பெற்றுள்ளனர். குழந்தைகள் இருவரும் தற்போது திருநம்பியாக மாறிய கவின் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர்.




மேலும், தனது மாற்றம் குறித்து அவர் தெரிவிக்கையில், பெண்ணாக பிறந்த ஒருவர் ஆணாக மாறுவதையோ, ஆணாக பிறக்கும் ஒருவர் பெண்ணாக மாறுவதையோ, இந்த சமூகம் இன்னும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர் மீது என்ன தவறு இருக்கிறது. உடலில் ஏற்படும் இது போன்ற மாற்றங்களுக்கு அவர்கள் என்ன செய்ய முடியும். திருமண மாகி 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் நான் ஆணாக மாறியதை உணர்ந்தேன். இதனை எனது கணவரிடமும் நான் தெரிவித்தேன். அவரும் புரிந்து கொண்டு என்னை வாடா... போடா என்று அழைக்கும் அளவுக்கு எங்களிடம் புரிதல் இருந்தது. ஆனால், இரு ஆண்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. 



இந்த சமூகம் இனி எத்தனை நாட்களுக்குத் தான் உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களை கூட ஏற்றுக் கொள்ளாமல் எங்களை போன்றவர்களை ஒதுக்க போகிறது. நிச்சயம் இந்த சமூகம் ஒருநாள் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும் என நான் நம்புகிறேன் என்றார். 


மேலும், ஆணாக மாறி தனது உரிமைக்காக போராடி வரும் கவின் எம்.ஏ. சைக்காலஜி படிப்பை முடித்துள்ளார். தனது உரிமைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி பாஸ்போர்ட்டில் தந்தையின் பெயர் இருக்கும் பகுதியில் பெற்றோர் என மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து தற்போது இந்த வழக்கிற்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண