இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது.  தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாட்டிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. 

Continues below advertisement

98 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்:

பீகாரில் சுமார் 60 லட்சம் வாக்காளர்கள் எஸ்ஐஆர் பணிக்கு முன்பு நீக்கப்பட்ட போதே இந்தியா முழுவதும் மிகப்பெரிய பேசுபொருளானது. பீகாரில் தங்கள் தோல்விக்கு எஸ்ஐஆர் பணியே காரணம் என்று காங்கிரஸ் - ராஷ்ட்ரியா ஜனதா தள கூட்டணி குற்றம் சாட்டியது. 

இந்த சூழலில், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிக்கு முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்ஐஆர் பணிக்கு பின்பு 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Continues below advertisement

தேர்தலில் எதிரொலிக்குமா?

அதாவது, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் 66 லட்சம் பேர், இரட்டை வாக்காளர்கள் 3 லட்சம் பேர், உயிரிழந்தவர்கள் 26 லட்சம் பேர் என்பதால் வாக்காளர் பட்டியலில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்னும் 6 மாத காலத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை, கூட்டணி, தேர்தல் வாக்குறுதிகள் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் என்பது தேர்தலில் எதிரொலிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல்:

இரட்டை வாக்காளர்கள், இடம்பெயர்வு காரணமாக வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர் சில லட்சம் பேர் மீண்டும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் நடத்தும் முகாம் மூலமாக விண்ணப்பிப்பார்கள். இதனால், மீண்டும் சில லட்சம் வாக்காளர்கள் இந்த பட்டியலில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது. 

ஜனவரி மாத இறுதியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. அதன் அடிப்படையிலே தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் எத்தனை பேர்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். பீகாரில் எஸ்ஐஆர் பணிக்கு பின்பு  தேர்தல் முடிவுகளில் ஆளுங்கட்சியாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

எதிர்பார்ப்பு:

தமிழ்நாட்டில் இந்த எஸ்ஐஆர் பணி அரசியல் கட்சிகள் மத்தியில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது? எஸ்ஐஆர் -ஐ எதிர்க்கும் ஆளுங்கட்சியான திமுக-விற்கு இது தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது? அதிமுக - பாஜக கூட்டணிக்கு இது நேர்மறை விளைவுகளை உண்டாக்குமா? என்ற பல கேள்விகளை வாக்காளர் மத்தியில் எழுப்பியுள்ளது.