தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக வாக்காளர் சரிபார்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வழங்கப்பட்ட SIR விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய இரண்டு முறை காலஅவகாசம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் தேதியோடு இறுதி நாள் நிறைவடைந்தது. இதனையடுத்து புதிய வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா.? புதிதாக பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்....
1.வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை எப்படி பார்க்க முடியும்?
தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in என்ற இணையதளம் அல்லது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில்,வாக்காளர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை (EPIC Electoral Photo Identity Card) எண்னை பதிவு செய்து சரிபார்த்துக்கொள்ளலாம்.
2. புதிதாக வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படுமா.?
வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்க பட்டவர்களின் பெயர்கள் இடம் பெறாது.
கண்டறிய இயலாதாவர்கள், முகவரியில் இல்லாத வாக்காளர்கள் (Absent), இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் தனியாக வெளியிடப்படும்.
3. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? மீண்டும் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.?
வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் ஆன்லைன் மூலமாகவும் படிவங்களை சமர்ப்பிக்கலாம்.
4. பெயர் சேர்ப்பதற்கான படிவத்தை யாரிடம் வாங்க வேண்டும்.? விண்ணப்பத்தை யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்?
ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் 50 படிவம் வழங்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பம் 6 என்ற படிவத்தை பெற்று பூர்த்தி செய்து திரும்பவும் அவரிடமே வழங்க வேண்டும்.
5. வாக்காளர் பட்டியலில் எத்தனை நாட்கள் வரை காலஅவகாசம் .? சமர்பிக்க கடைசி நாள் எப்போது.?
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிச.19-ம் தேதி முதல் ஐனவரி 18ம் தேதி வரை தங்களது ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.
6.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள், தங்களது இருப்பிட முகவரி அல்லது தொகுதி மாற விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமா?
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் முகவரி, தொகுதி மாற படிவம் 8 சமர்ப்பிக்கலாம்.
7. புதிதாக விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் எப்போது வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்?
பெயர் சேர்த்தல், திருத்தல், ஆட்சேபனைகள் தொடர்பாக அனைத்து விண்ணப்பங்களும், பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.