கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இறுதியாக, சென்னையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசும் வெளியிட்டுள்ளது.



 

சென்னை பசுமை விமான நிலையம்

 

சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும் , மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி ,குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 

 காவல்துறை கண்காணிப்பில் கிராமங்கள்

 

ஏகனாபுரம் கிராம மக்கள் 2 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து, தினமும் மாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான முறையில் விவசாய வேலைகளை செய்து முடித்துவிட்டு, விமான நிலையம் வேண்டாம் என கூறி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். கிராம மக்கள் போராட்டத்தால், காவல்துறையினர் கண்காணிப்பு வளையத்தில் கிராமங்கள் வந்துள்ளது. குறிப்பாக அப்பகுதியில், பல இடங்களில் சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சில சமயங்கள் கிராம மக்கள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் கூட ஆதார் கார்டு, தேவைப்படுவதாக குற்றச்சாட்டை வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

 



 

மக்களை சந்திக்க தடை ?

 

8 வழி சாலை எதிர்ப்பு போராட்டக்காரர்களாக செயல்பட்டு வந்த, பழனியப்பன் மற்றும் பேராசிரியர் குணசேகர தர்மராஜ் ஆகியோர் பாதிக்கப்படும்,  மக்களை நேரில் சந்திக்க சென்ற பொழுது கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் சென்ற பொழுது அச்சரப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டார். இதேபோன்று, எஸ்டிபிஐ கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை சந்திக்க சென்ற பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.


 

தீவிரமடையும் போராட்டம்

 

இந்நிலையில் வரும் 17ஆம் தேதி தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில் பரந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோரிக்கை விடுத்து, 13 கிராமங்களையும் சேர்ந்த கிராம மக்கள் தமிழக சட்டசபையை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.