புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவைச் சேர்ந்த குமரவேலு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "வளையன்வயல் கிராமம் தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமம்.  இந்த கிராமம் குன்று புறம்போக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ராமைய்யா மற்றும் கருப்பைய்யா ஆகிய இருவரும் குவாரி நடத்துவதற்காக அனுமதி பெற்று வளையன்வயல் கிராமத்தில் கல் குவாரி நடத்தி வருகின்றனர். ஆனால் அனுமதி பெற்ற அளவை விட அதிகமாக சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் குவாரி நடத்தி வருகின்றனர். ராமையா என்பவரின் மனைவி அழகு கிராம பஞ்சாயத்து தலைவராக உள்ள நிலையில், அவரும் சட்டவிரோதமாக கல்குவாரி நடத்தி வருகிறார். நீர்நிலை பகுதியில் சட்டவிரோதமாக குவாரி நடத்தி வருகின்றனர்.

 

சுமார் 600 அடி நீளத்தில் 125 அடி அகலத்தில் 300 அடி ஆழத்திற்கு 8000 லோடு கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில், மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போதும் அப்பகுதியில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே, நீதிமன்றம் உத்தரவிட்டும் சட்டவிரோத குவாரி நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "சட்டவிரோதமாக குவாரி நடத்தியவர்களுக்கு 9 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், எவ்வளவு அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். இதுவரை அபராத தொகை எதுவும் வசூலிக்கப்படவில்லை என பதில் அளிக்கப்பட்ட நிலையில் சட்டவிரோத குவாரி நடத்தியவர்களிடம் இருந்து அபராத தொகையை வசூலிக்க வருவாய்த்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளனர்? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 



போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை சிறையில் இருந்த கைதி புழல் சிறைக்கு மாற்றம்


ராமநாதபுரத்தை சேர்ந்த மெஹ்ருன் நிஷா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் ரிபாயுதீன் கடந்த 2013 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு 2016 ஆம் ஆண்டு முதல் இலங்கை சிறையில் உள்ளார். இலங்கை சிறையில் இருந்து இந்திய சிறைக்கு மாற்றுவது குறித்து இந்திய தூதரகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலனை செய்து, இலங்கை சிறையில் உள்ள எனது கணவரை இந்திய சிறைக்கு  மாற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என  மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மத்திய, மாநில அரசு தரப்பில் இலங்கை சிறையிலிருந்து கைதி ரிபாயுதீன் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.