810 காவலர்களுக்கு தங்கள் விருப்பத்திற்கேற்ப பணியிட மாற்றம் வழங்கப்பட்டு தமிழ்நாடு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, பொதுமக்களின் பிரச்சனையோடு சேர்த்து காவலர்களின் நலனிலும் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். காவலர்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காவலர்களுக்கு அவர்கள் கேட்ட இடத்துக்கே டிஜிபி சைலேந்திரபாபு பணியிட மாறுதல் வழங்கி வருகிறார். அதன் பேரில் தற்போது 810 காவலர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில்,



  • 810 காவலர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அந்தந்த நகரங்களில் / மாவட்டங்களில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு tta எனப்படும் Travel Allowance  வழங்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • சம்பந்தப்பட்ட யூனிட் அதிகாரிகள் அதற்கேற்ப தேவையான உத்தரவுகளை பிறப்பித்து, பணியிலிருந்து எப்போது விடுப்பு அளிக்கப்பட்டு இடமாற்றத்தில் எப்போது சேர வேண்டும் என அறிவிக்க வேண்டும்.  அதனை  உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  • தனி நபர் எவரேனும் ஸ்போர்ட்ஸ் கிளஸ்டரில் இடுகையிடப்பட்டிருந்தால், அவர்கள் இப்போது பணியாற்றும் பிரிவில் 03 ஆண்டுகள் நிறைவடையும் வரையில் மாற்றப்பட மாட்டார்கள். தனிநபர்கள் எவரேனும் விளையாட்டுக் குழுவின் கீழ் வந்தால், மேலதிக அறிவுறுத்தல்களுக்காக அவர்களின் பணியிட மாற்றத்திற்கு முன் தலைமை அலுவலகத்திற்கு தகவல்  தெரிவிக்க வேண்டும்.

  • காவல்துறை பணியாளர்கள் நோட்டீஸ் அல்லது துறை ரீதியான நடவடிக்கை மூலம் வந்திருந்தால் அவர்களை விடுவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அப்படியானால், மேலதிக அறிவுறுத்தல்களுக்கு உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

  • மேலும், இந்த இடமாற்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள தனிநபர்கள் யாரேனும் கடந்த ஒரு வருடத்தில் நிர்வாக அடிப்படையில் மாற்றப்பட்டிருந்தால் அவர்களின் பணி இடமாற்றத்திற்காக மேலதிக அறிவுறுத்தல்களுக்காக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

  • இந்த இடமாற்றங்கள் தனிநபர்களின் கோரிக்கையின் பேரில் மட்டுமே உத்தரவிடப்படுகின்றன. எனவே இது ரத்து செய்யப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஓய்வு பெறும் டிஜிபி சைலேந்திர பாபு: 


தமிழ்நாட்டின் டிஜிபியான சைலேந்திரபாபு இந்த மாத இறுதியோடு ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு அடுத்து இந்த முக்கியமான பொறுப்பில் அமரப்போவது யார் என்ற கேள்வி காவல்துறை வட்டாரம் மட்டுமின்றி அரசியல் கட்சியினர் மத்தியிலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் 22ஆம் தேதி தமிழ்நாட்டின் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளாக இருப்பவர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டு தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ், தலைமைச் செயலாளர் இறையன்பு, தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சகத்தை நாடுகின்றனர். 


அதில் , பணி மூப்பு, தகுதி, திறமை அடிப்படையில் முதல் 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளும் தேர்வு செய்து தமிழக அரசிடம் வழங்குவர். அந்த பட்டியலில் ஊர் காவல் படை தலைவராக உள்ள பி.கே.ரவி, சென்னை காவல் ஆணையராக உள்ள ஷங்கர் ஜிவால், காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக உள்ள ஏ.கே.விஸ்வநாதன், டெல்லி காவல் ஆணையராக உள்ள சஞ்சய் அரோரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.