தமிழ்நாட்டில் இன்று மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் மொஹரம் பண்டிகை முன்னிட்டு இன்று தமிழ்நாட்டில் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.


தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுm. குறிப்பாக பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய விழாக்களின்போது, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு தரப்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தற்போது வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, இந்த வாரத்தில் மாநிலத்தில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சனி மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறை நாட்கள் என்பதால் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல 300 பேருந்துகளும், கோவை, திருச்சி, நெல்லை மற்றும் மதுரை போன்ற ஊர்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல 300 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.  


இது தொடர்பான அறிவிப்பில், “சனி, ஞாயிறு வார விடுமுறை, மொஹரம் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூா், மயிலாடு துறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 150 பேருந்துகளும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


மேலும் கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பேருந்துகளும் என மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல, விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவா் ஊா்களுக்கு செல்ல வரும் 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.


பிற தடங்களில் 100 சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணி அமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.