தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடப்பாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பேசிய அப்போதைய மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் தகுதியாக 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என தெரிவித்திருந்தார்,
இதற்கான கணக்கெடுக்கும் பணிகள் நடந்து கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த அறிவிப்பு ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடத்தின் போது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேற்படி, அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிடுவதற்கான அரசாணையை கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது. இந்த அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை நாளை முதல் (ஜூன் 22) மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நாளை முதல் செயல்படாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.