தமிழ்நாடு அரசு அறிவித்தபடி  500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 


தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதலமைச்சராக முதல்முறையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. இந்த கோரிக்கை சமீபத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து வலுவாக எழுத் தொடங்கியுள்ளது. 


இப்படியான நிலையில், நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஏப்ரல் 12 ஆம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அப்போதைய அந்த துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும்  மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில்  தகுதியாக 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும்’ என தெரிவித்திருந்தார். 


இதனைத் தொடர்ந்து இந்த கடைகள் கண்டறியும் பணி நடைபெற்று வந்தது. பின்னர் ஏப்ரல் 20 ஆம் தேதி மதுக்கடைகள் மூடுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் இந்த அறிவிப்பு  கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டமான ஜூன் 3 ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை.


இதனிடையே நேற்றைய தினம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘மாநிலம் முழுவதும் செயல்படும் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நாளை முதல் செயல்படாது’ என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று (ஜூன் 22) முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது. அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 


மண்டல வாரியாக விவரம் 


சென்னை மண்டலத்தை பொறுத்தவரை சென்னையில் 61 கடைகளும், காஞ்சிபுரத்தில் 31 கடைகளும், திருவள்ளூரில் 46 கடைகளும் மூடப்படுகிறது. இதேபோல் கோவை மண்டத்தில் கோவையில் 20 கடைகளும், திருப்பூரில் 24, ஈரோட்டில் 24, நீலகிரியில் 3, கரூரில் 7 கடைகளும் மூடப்படும். 


மேலும் மதுரை மண்டலத்தில் மதுரையில் 21, திண்டுக்கலில் 15, சிவகங்கையில் 14, ராமநாதபுரத்தில் 8, விருதுநகரில் 17, திருநெல்வேலியில் 13, தூத்துக்குடியில் 16, கன்னியாகுமரியில் 12, தேனியில் 9 டாஸ்மாக் கடைகளும் இன்று முதல் செயல்படாது. அதேபோல் சேலம் மண்டலத்தை பொறுத்தவரை சேலத்தில் 17, தருமபுரியில் 4, கிருஷ்ணகிரியில் 2, நாமக்கலில் 18, வேலூரில் 8, திருவண்ணாமலை 8, அரக்கோணம் 2  கடைகளும் மூடப்படுகிறது. 


திருச்சி மண்டலத்தின் நிலவரப்படி திருச்சியில் 16, நாகப்பட்டினம் 7, தஞ்சாவூரில் 15, புதுக்கோட்டையில் 12, திருவாரூரில் 10, கடலூரில் 11, விழுப்புரத்தில் 21, பெரம்பலூரில் 8 கடைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஏபிபி நாடு செய்திகளை உடனுக்குடன் டெலிகிராம் செயலி மூலம் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்