மாநில அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணைய தளத்தில் இருந்து 50 லட்சம் பயணிகளின் ஆதார் விவரங்கள் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த தகவலை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் உறுதி படுத்தவில்லை. 


தமிழ்நாடு நியாய விலைக் கடையின் மூலம் ஒவ்வொரு மாதமும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக, குடும்ப அட்டைதாரகளின் ஆதார் விவரங்களை நுகர்பொருள் வாணிபக் கழகம்  திரட்டி அரசின் வலைதளங்களில் பதிவு செய்திருந்தது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ், 6 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் உள்ளனர். 67683194 எண்ணிகையிலான ஆதார் பதிவுகளும், 21317385 கைபேசி பதிவுகளும் நுகர்பொருள் வாணிபக் கழகம் திரட்டியுள்ளது. இந்நிலையில், பொது விநியோக திட்டத்தின்  50 லட்ச பயனாளிகளின் ஆதார் தரவுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக Technisanct  என்ற இணைய பாதுகாப்பு (Cyber Security) ஸ்டார்ட்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 49,19,668 பயனாளிகளின் அதார் விவரங்களும், 3,59,485 பயனாளிகளின் தொலைபேசி எண்களும் கசிந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.




டெக்னிசாங்க்டின் தலைமை நிர்வாக அதிகாரி நந்தகிஷோர் ஹரிகுமார் இதுகுறித்து கூறுகையில், " ஜூன் 28 அன்று தரவுகள் ஆன்லைனில் வெளியானது. ஆனால், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தரவுகள் நீக்கப்பட்டன" என்று தெரிவித்தார். மேலும், இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழுவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.  


பான்-ஆதார் இணைப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா? விவரமா தெரிஞ்சுக்கோங்க!


முன்னதாக, ஆதார் விவரங்கள் சர்வதேச தரத்துக்கு இணையாக பாதுகாக்கப்பட்டு வருவதாக ஆதார் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. ஆதார் தகவல்கள் முற்றிலும் பாதுகாப்பானவை. நலத்திட்டங்களுக்காக அரசு வலைதளங்களில் வெளியான தகவல்கள் எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது. பயோமெட்ரிக் இல்லாமல் அவற்றை தவறாக பயன்படுத்த முடியாது.


ஆதார் எண் ரகசியமானது அல்ல என்று ஆதார் ஆணையம் தெளிவுபடுத்தியிருந்தது. அரசிடம் இருந்து சில உதவிகளைப் பெற ,அங்கீகாரம் பெற்ற சில முகமைகள் மூலம் அவை பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஆதார் எண்ணை வைத்து நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகளில் ஈடுபட முடியாது. அதற்கு விரல் ரேகையோ, கருவிழி படலமோ தேவையாகும். தற்போது ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளன என்பதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை. மேலும் ஆதார் விவரங்கள் பாதுகாப்பானவையா என்பதை தெரிந்துகொள்ள, ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் www.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்துக்கு சென்று பாதுகாப்பு முறையைப் பரிசோதித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. இத்தனை கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் விபரங்கள் வெளியானது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Aadhaar Phone Number Update: ஆதாரில் தொலைபேசி எண்ணை மாற்றவேண்டுமா? இதோ உங்களுக்கான வழிமுறைகள்!