ஜனவரி 26 குடியரசு தின விழாவில் தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாக பரப்படும் செய்தி போலி என்பது தெரியவந்துள்ளது. 


தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் என பரப்பப்படும் போலி செய்தித்தாள் படம் அடிக்கடி உலா வந்து கொண்டு இருக்கிறது. அந்த செய்தி தாளில்  “கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து விருதாச்சலம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து செய்யாரு மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டம், சேலம் மாவட்டத்தை இரண்டாக ஆத்தூர் மாவட்டம் என பிரிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விருதாச்சலம் மாவட்டத்தில் விருதாச்சலம், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர் தாலுக்காக்கள் அமையும் எனவும் செய்யாறு மாவட்டத்தில் ஜமுனாமரத்தூர், போளூர், ஆரணி, செய்யாறு, வெண்பாக்கம், வந்தவாசி தாலுக்காக்கள் அமையும் எனவும், பொள்ளாச்சி மாவட்டத்தில் கிணத்து கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, உடுமலை, மடத்துகுளம், தாலுக்காக்கள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






மேலும், கும்பகோணம் மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், கும்பகோணம், திருவிடமருதூர் ஆகிய தாலுகாக்கள் அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலி, காரைக்குடி, புதுக்கோட்டை, நாமக்கல், கோவில்பட்டி, மாநகராட்சிகளாக தரம் உயரும். பெருந்துறை, சென்னிமலை, அவினாசி, அரூர், பரமத்தி வேலூர், ஊத்தங்கரை, செங்கம், போளூர், செஞ்சி, காட்டுமன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி, பொன்னமராவதி, தம்மம்பட்டி, அந்தியூர், சஙகிரி, வத்தலகுண்டு, ஆண்டிப்பட்டி, ஜக்கம்பட்டி, உத்தமபாளயம், வேடசந்தூர், முதுகுளத்தூர், விளாத்திகுளம், ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயரும். 


படப்பை, ஆண்டிமடம், திருமானூர், வேப்பந்தட்டை, தியாக துருகம், வேப்பூர் உள்ளிட்ட ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயரும். இதன் மூலம் தமிழகத்தில் மாவட்டங்கள் எண்ணிக்கை 43 ஆக உயரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், இதன் உண்மை நிலவரத்தை தமிழ்நாடு ஃபேக்ட் செக் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், 


பொய்: தமிழ்நாட்டில் கும்பகோணம், பொள்ளாச்சி, விருதாச்சலம், ஆத்தூர், செய்யாறு ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாகுவது தொடர்பாக குடியரசு தினத்தன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்று ஒரு நாளிதழின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 


உண்மை: இது முற்றிலும் பொய்யான தகவல். இந்த புகைப்படம் பல மாதங்களாக பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற எந்த அறிவிப்பும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்படவில்லை.