மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் 16.1 லட்சம் மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதுயிருந்தனர். முன்னதாக, ஜூலை மாதத்தில் நீட் தேர்வு முறை மாற்றப்பட்டது, புதிய முறைப்படி, மாணவர்கள் 200 மல்டி-சாய்ஸ் வகை (MCQ) கேள்விகளில் 180 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த தேர்வை எழுதிய பல மாணவ மாணவியர்கள் தாவரவியல் பாடத்தில் கேள்விகள் எளிதாக இருந்ததாக கூறினர்.
இந்நிலையில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற நீட் தேர்வை சென்னையில் 47 வயது மதிக்க நபர் ஒருவர் எழுதியிருந்தார். அவர் தேர்வு எழுத முக்கிய காரணம் அவருடைய மகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. சென்னை அண்ணாநகரில் இருந்த ஒரு தேர்வு மையத்திற்கு வடபழனியை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் மோகன் என்ற நபர் தேர்வு எழுத வந்துள்ளார். அவரை பார்த்ததும் பெற்றோர் என்று நினைத்து காவலர்கள் அவரை உள்ளே விடாமல் தடுத்துள்ளனர். அவர் தன்னுடைய ஹால் டிக்கெட்டை காட்டிய உடன் அதை சரிபார்த்துவிட்டு பின்னர் அவரை தேர்வு எழுத அனுமதித்துள்ளனர்.
தேர்வை எழுதி முடித்துள்ள மோகன் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் எதற்காக நீட் தேர்வு எழுதினேன் என்று கூறியுள்ளார். அதன்படி, "நீண்ட நாட்களுக்கு பிறகு தேர்வு எழுத செல்வது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. என்னை சுற்றி அமர்ந்து இருந்த மாணவர்கள் என்னை வித்தியாசமாக பார்த்தனர். நான் அவர்களை கண்டு கொள்ளவில்லை. என் கவனம் முழுவதும் தேர்வு மீது தான் இருந்தது. நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக 12ஆம் வகுப்பை முடித்தேன். அப்போது எனக்கு மருத்துவம் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதை என்னால் செய்ய முடியவில்லை.
என்னுடைய தங்கையின் மகள் கடந்த ஆண்டு நீட் தேர்விற்கு தயாராகி கொண்டு இருந்தார். அப்போது எனக்கு இந்த தேர்வு எழுத ஆர்வம் வந்தது. அத்துடன் நான் எழுதி பார்த்து என்னுடைய மகளுக்கு பயிற்சி அளிக்கலாம் என்று நினைத்தேன். இதனால் நீட் தேர்விற்கு விண்ணப்பித்து எழுதினேன். இம்முறை நான் மொத்தமாக உள்ள 720 மதிப்பெண்களுக்கு நிச்சயம் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் மருத்துவ கல்லூரியில் சேரும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை" எனக் கூறினார்.
நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 17 வயது முடிந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 25 வயது என்ற வரம்பு இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வில் அதிகபட்ச வயது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் 25 வயதுக்கு மேல் உள்ளவர்களும் தற்போது நீட் தேர்வு எழுதலாம். ஆகவே தான் மோகன் இந்தாண்டு நீட் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மகளுக்கு பயிற்சியளிக்க 47 வயது தந்தை தேர்வு எழுதிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: ‛சமரசமில்லா சட்டப் போராட்டத்தால் நீட்டை விரட்டுவோம்’ - முதல்வர் ஸ்டாலின் அறிக்கை!