அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40 சதவீதமாக ஆக அதிகரிக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பால் ஆண் பணியாளர்கள் குறைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.  அந்த அறிவிப்பில், அரசுப் பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30%ல் இருந்து 40% ஆக உயர்த்தப்படும். கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். முதல் தலைமை பட்டதாரிகள், அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தோருக்கு அரசுப்பணியின் முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு முகமைகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித்தேர்வாக கட்டாயமாக்கப்படும். அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


 






இதில் அரசுப் பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு உயர்வு அறிவிப்பு தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாற்றத்தை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியமானது என்பதை உணர்ந்து நேரடி பணி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சதவீதம் ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த  புதிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு கொடுத்தனர். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. இந்த மாற்றம் தனியார் துறையிலும் நிகழவேண்டிய ஒன்று. சமத்துவத்தை நோக்கிய பாதையில் தளர்வின்றி பயணிப்போம்’ எனப் பதிவிட்டுள்ளார்.


 







முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி கடந்த 1990ஆம் ஆண்டு அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். மேலும், தொடக்கப்பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பதவிகளில் பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெண்களுக்கு அரசுப்பணிகளில் இடஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்தியுள்ளது பெண்களுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. ஆனால், ஆண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, இந்த அறிவிப்பால் வரும் காலங்களில் அரசாங்க வேலைகளில் ஆண் பணியாளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில், மாநிலத்தில் பெண்களின் எண்ணிக்கையை விட, ஆண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இவ்வாறு நடைபெறுவதற்கான சாத்தியம் இருக்க அதிக வாய்ப்புள்ளது.