கடலூர் மாவட்டம் பண்ருட்டி சாலையில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு,  ரூபாய் 2 லட்சம்  நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் ரூபாயும்  நிவாரணமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 


மேலும் அந்த உத்தரவில், “ கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம். மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியிலிருந்து கடலூருக்குச் சென்ற தனியார் பேருந்தின் வலதுபுற முன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி வந்த தனியார் பஸ் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.


இச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன். மேலும்,  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளேன்.


இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பனத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.