Lok Sabha Election 2024: வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்டதாக ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்களர்களுக்கு பணம் தரப்படுவதை தடுக்க, தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன தணிக்கை மற்றும் சோதனைகளில், பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்தவகையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட, 2 பேரிடமிருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், நெல்லை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும், நயினார் நாகேந்திரனுக்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காகவே பணத்த கொண்டு சென்றதாக கைதானவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், என்று தொடரப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம்?
நெல்லை தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான ராகவன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பணம் கொடுப்பதற்காக, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 28 லட்ச ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையில் இருந்து, நெல்லைக்கு 4 கோடி ரூபாய் கொண்டு வர முயன்ற வழக்கில் நயினார் நாகேந்திரன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். எனவே காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தேன்.
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி அமலாக்கத்துறையிடமும் மனு கொடுத்தேன். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இதுகுறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லையில் தேர்தல் நடைபெறுமா?
இந்த வழக்கு தலைம நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வியாழனன்று விசாரணை நடைபெறும் என அறிவித்தனர். நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீது இன்று முக்கிய உத்தரவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா? அல்லது நெல்லையில் தேர்தல் நிறுத்தப்படுமா? என்பன போன்ற எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
ஒருவேளை குற்றச்சாட்டுகள் உறுதியானால், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் நயினார் நாகேந்திரன் இழக்கவேண்டியது இருக்கும். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பணப்பட்டுவாடா புகாரில் தமிழ்நாட்டில் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.