வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கஸ்பா பஜார் பகுதியை சேர்ந்தவர்கள் அன்சர் (34)-சுரேயா தம்பதியினர். அன்சர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார், சுரேயா வீட்டிலேயே பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு ஆப்ரீன் என்ற 4 வயது பெண் குழந்தையும், அசேன் என்ற 3 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் தந்தை அன்சர் நேற்று இரவு வீட்டுக்கு வரும் போது சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் எண்ணையில் பொறித்த மீன் துண்டுகளை வாங்கி வந்துள்ளார். அதை தனது குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். இதனையடுத்து குழந்தைகள் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளது. பயந்து போன பெற்றோர் செய்வதறியாது அருகில் உள்ள மசூதிக்கு குழந்தைகளை அழைத்து சென்று மத்திரித்து வந்துள்ளனர். காலையில் உடல் நிலை மோசமாகவே அப்பகுதியில் உள்ள தனியார் மெடிக்கலுக்கு சென்று ஒரு டானாக் பாண்டல், ஒரு மாத்திரையை வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். இதை உண்ட உடனே அடுத்த 10 நிமிடத்தில் குழந்தைகள் சுயநினைவை இழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் அவசர அவசரமாக வேலூர் பழைய அரசு பெண்ட்லெட் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இரண்டு குழந்தைகளையும் பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம் குறித்து அரசு மருத்துவர் கூறுகையில், குழந்தைகளுக்கு 2 நாட்களாகவே வயிற்றுப்போக்கு இருந்ததாக பெற்றோர் கூறுகின்றனர். மேலும் நேற்று இரவு மீன் சாப்பிட்டதாகவும் அதனால் வாந்தி ஏற்பட்டதால் அவர்களே அப்பகுதியில் உள்ள மருந்து கடையில் மருந்தை வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்ததாகவும் கூறுகின்றனர். இருந்தபோதும் தெளிவாக அவர்கள் எதையும் குறிப்பிடவில்லை. பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே இரண்டு குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என கூறினர்.
இச்சம்பவம் குறித்து வேலூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வயிற்றில் 10 மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளை ஒரே நேரத்தில் பரிகொடுத்த தாயின் வேதனை சொல்லி மாலாதது. உயிரிழந்த குழந்தைகள் வசித்த பகுதியான கஸ்பா பஜார் தெருவில், இச்சம்பவத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கஸ்பா ஆரம்ப சுகாதார நிலையை செவிலியர்கள் வீடு வீடாக சென்று குடிநீர் மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இரு குழழ்தைதள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ அழைத்து செல்ல வேண்டும் என்றும் தாமாக பெற்றோர் எந்த முடிவையும் எடுக்க கூடாது என்றும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.