சொன்னை ராயபுரத்தில் 27 பேரை வெறிநாய் கடித்த சம்பவத்தில் நாய்க்கு ரேபிஸ் தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் நாய் கடியால் பாதிக்கப்பட்ட 27 பேரும் 5 தடுப்பு ஊசிகள் செலுத்திக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம் நெரிசலான பகுதியாகும். இந்த பகுதியில் ஏராளமான கடைகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனை என அனைத்தும் இருப்பதால் தினசரி மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பள்ளி முடிந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் இருக்கும் தெரு நாய் ஒன்று பொதுமக்களை பார்த்து குரைத்து உள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு இருக்கும் பொதுமக்களை அந்த நாய் துரத்திச் சென்று கடித்துள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 27 பேரை கடித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் இருக்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
உடனடியாக நாய் கடித்த மக்கள் அருகில் இருக்கும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அந்த நாயை அப்பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து கல்லால் அடித்துக் கொன்றனர். இதனையடுத்து நாயை உடலை பரிசோதனைக்கு கொண்டு சென்ற கால்நடை மருத்துவர்கள் நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர். நாய் கடித்த மக்கள் அனைவரும் 5 தடுப்பூசிக்கள் செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களை வெறிநாய் கடித்த விவகாரம் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போடும் பணியினை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி அதே பகுதியில் சுற்றித்திரிந்த 25 நாய்கள் பிடித்து, புளியந்தோப்பு நாய்கள் இனக் கட்டுப்பாடு மையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பின் வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போடப்பட்டு, பின்னர் பிடித்த இடத்திலேயே விடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது
சென்னை மாநகராட்சி முழுவதும் 16 நாய்பிடி வாகனங்கள் உள்ளன, ஒரு வாகனத்திற்கு ஐந்து பணியாளர்கள் உள்ளனர். சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போடும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் 16 ஆயிரம் நாய்கள் பிடிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது. இந்தாண்டில் இதுவரை 17,813 நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், 13,486 கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள்து.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ராயபுரத்தில் 27 பேரை வெறி நாய் கடித்த சம்பவத்தில், நாய் கடித்த, 27 பேருக்கும் ஐந்து டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள அறிவுறித்துள்ளது. ஏற்கனவே ஒரு டோஸ் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், 27 பேருக்கும் இன்று இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.