ரமலான் பண்டிகையையொட்டி இந்த ஆண்டும் பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி விநியோகம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.   


இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2023 ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.


2023 ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.


இதன்படி, 6,500 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 25 கோடியே 63 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதன் பின்னர், சென்னையில் நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் (india union muslim league) பவள விழா மாநாட்டில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் உரையாற்றும் போது, திமுகவுக்கும் இஸ்லாமிய மக்களுக்குமான தொடர்பு என்பது இன்று, நேற்று ஏற்பட்டது அல்ல; திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்குமான நட்பை யாராலும் பிரிக்க முடியாது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளிம்பு நிலை மக்களுக்கான அமைப்பாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டு பேசினார். 


 மேலும் அவர் தனது உரையில், சாதாரண சட்டத்துக்குக் கூட ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை; சூதாட்டம், நுழைவுத்தேர்வு உள்ளிட்டவைகளால் ஏற்படும் உயிர்ப் பலிகளைத் தடுக்கும் மசோதாவுக்கும் ஒப்புதல் தராமல் தடுக்கின்றனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். எதிர்வரும்  மக்களவைத் தேர்தலில் (2024) வெற்றி பெற  எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் குறிப்பிட்டு பேசினார்.