விழுப்புரம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு 104 தேர்வு மையங்களில், 21,879 மாணவ /மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.


விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அமைக்கப்பட்டுள்ள 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அவர்கள் இன்று (01.03.2024) நேரில் பார்வையிட்டு, தேர்வு எழுதும் மாணவியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.


 


மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முழுவதும், 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் 01.03.2024 முதல் 22.03.2024 வரை நடைபெறவுள்ளது.


 


அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், நடைபெறும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 104 தேர்வு மையங்களில், 21,879 மாணவ /மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர்.


 


பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை, 121 அரசுப்பள்ளிகளில் பயிலும் 7,001 மாணவர்களும், 8,153 மாணவியர்களும், 17 அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 822 மாணவர்களும், 837 மாணவியர்களும், 57 தனியார் பள்ளிகளில் பயிலும் 2,736 மாணவர்களும், 2,330 மாணவியர்கள் என மொத்தம் 195 பள்ளிகளில் பயிலும் 10,559 மாணவர்கள், 11,320 மாணவியர்கள் என 21,879 மாணவ, மாணவியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.


 


இத்தேர்வில், கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத 145 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. மொழிப்பாடம் (ஆங்கிலம்) தேர்வு எழுதுவதிலிருந்து 116 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 145 கண்பார்வை குறைபாடு/செவித்திறன் குறைவு/மனநலம் குன்றிய மற்றும் நரம்பியல் கோளாறு உடைய மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 8 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தரைத்தளத்தில் அமர்ந்து தேர்வெழுதிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


 


மேலும், ஒவ்வொரு தேர்வு மையங்களிலும், மாணவர்களின் நலன் கருதி குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, தடையில்லா மின்சார வசதி, காவல்துறையினரின் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றிடும் பொருட்டு சிறப்பு போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாட்கள் மற்றும் விடைத்தாட்களை பாதுகாப்பாக கொண்டு சென்றிட ஆயுதம் தாங்கிய காவலருடன் பாதுகாப்புடன் கூடிய வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


 


தேர்வுப்பணியில் 05 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 105 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 105 துறை அலுவலர்கள், 28 வழித்தட அலுவலர்கள், 94 பறக்கும்படை உறுப்பினர்கள், 1737 அறைக் கண்காணிப்பாளர்கள், 145 சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 240 அலுவலக பணியாளர்கள் 67607 மொத்தம் 2459 தலைமையாசிரியர்கள்/முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


 


பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு இத்தேர்வானது தங்களுடைய எதிர்கால வாழ்வினை தீர்மானிக்கும் தேர்வு என்பதால் கவனமுடன் வினாத்தாட்களை படித்து நன்கு தேர்வு எழுதிட வேண்டும். மேலும், நடைபெறும் பொதுத்தேர்வினை எவ்வித அச்சமும் இன்றி, சிந்தனைகளை சிதற விடாமல், தேர்வு முடியும் வரை நாள்தோறும் பாடங்களை நன்கு படித்து தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, அவர்கள் தெரிவித்தார்.