வழக்கறிஞராகவும் திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளராகவும் இருக்கும் தமிழன் பிரசன்னா, தொலைக்காட்சிகள் நடத்தும் பல்வேறு விவாத நிகழ்ச்சிகளில் திமுக சார்பில் கலந்து கொண்டு வருகிறார். சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள இந்திராநகரில் தனது மாமனார் வீட்டில் வசித்துவரும் இவருக்கு நதியா என்பவருடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தமிழன் பிரசன்னாவின் மனைவியான நதியா இன்று வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
தமிழன் பிரசன்னா- நதியா தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றது. இன்றைய தினம் தனக்கு பிறந்தநாள் என்பதால் அதனை கொண்டாடி அப்புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என நதியா கேட்டதாகவும் கொரோனா காலம் என்பதால் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தமிழன் பிரசன்னா கூறியதால் மனமுடைந்த நதியா காலை 10:00 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அறையை பூட்டிக்கொண்டு வெகுநேரமாக நதியா வெளியே வராததால் தமிழன் பிரசன்னா கதவை உடைத்து பார்த்தபோதுதான் நதியா துக்கிட்டுக்கொண்டது தெரியவந்தது. இந்நிலையில் நதியாவை ஸ்டேன்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடல்நிலையை பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையெடுத்து நதியாவின் உடல் பிரேதபரிசோதனைக்காக மார்ச்சுரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியாவின் தந்தை ரவியிடம் புகாரினை பெற்று குற்றவியல் சட்டப்பிரிவு 174 இல் வழக்கு பதிவு செய்து கொடுங்கையூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட நதியாவின் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தியதுடன் மனைவியை இழந்த தமிழன் பிரசன்னாவிற்கு ஆறுதல் கூறினர்.