மதுரை பழைய விளாங்குடியைச்சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது நண்பர் வண்டியூர் பகுதியில் கடை நடத்தி வந்தார். அந்த கடைக்கு முத்துக்குமார் அடிக்கடி சென்று வந்தார். அந்த சமயத்தில் அருகில் இருந்த பள்ளிக்கூடத்தில் படித்த 10 வயது மாணவனிடம் ஆசை வார்த்தை கூறி, விளாங்குடியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்றுள்ளார். ஆனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன், முத்துக்குமாரின் பிடியில் இருந்து தப்பி வீட்டில் இருந்து வெளியேறினார். அந்த சிறுவன், கூச்சலிட்டபடி ஓடிவந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு, செல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, முத்துக்குமாரை கைது செய்தனர்.

 

இந்த வழக்கு மதுரை மாவட்ட குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஜான்சிராணி ஆஜரானார். முடிவில், முத்துக்குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் பல்வேறு தண்டனைச் சட்டப்பிரிவுகளின்கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.

 

 



மனைவியை ஆணவக்கொலை செய்ய முயற்சி - தன்னிடம் ஒப்படைக்க கோரி கணவன் வழக்கு

 

திருச்சி, வரகநேரியைச் சேர்ந்த ஜெகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "என்னுடன் கல்லூரியில் படித்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண்ணை காதலித்தேன். நாங்கள் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் அவரது பெற்றோர் எங்களது காதலை ஏற்கவில்லை. இதனால் கடந்த மார்ச் 12ஆம் தேதி இருவரும் திருச்சி தாலடியார் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். என் மனைவி கர்ப்பமானார். அவர்களது பெற்றோர் தற்கொலை  செய்வதாக கூறியதால் அவர்களது வீட்டுக்கு சென்றார். கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி செல்போனில் பேசிய என் மனைவி, தன்னை ஆணவக்கொலை செய்து விடுவதாக பெற்றோர் மிரட்டுவதாக கூறினார்.  பின்னர்  தொடர்பு கொள்ள முடியவில்லை.

 



 

என் மனைவியின் கருவை கலைத்துள்ளனர். அவர்களது வீட்டிற்கு நேரில் சென்றபோது, அங்கு இல்லையென கூறினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. என் மனைவியை சட்டவிரோதமாக தடுத்து வைத்து ஆணவக்கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். மனைவியை கண்டுபிடிக்க அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் மனைவிவை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், " போலீசில் அளித்த புகாரில் இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் திருமணம் செய்து கொண்டதாக தவறான தகவலை தெரிவித்துள்ளார். எனவே, நீதிமன்றத்திற்கு தவறான தகவலை தெரிவித்ததாக அவர் மீது அறந்தாங்கி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.