திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 45 நிமிடங்கள் கோயில் நடை சாத்தப்பட்டது.
முருகனின் அருபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்வது திருச்செந்தூர் முருகன் கோயில். இந்த கோயிலில் தெய்வானை என்ற கோயில் யானை உள்ளது. இந்த யானைக்கு 25 வயது ஆகிறது. இந்த யானை கோயிலில் உலா வருவது, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில்தான் இன்று சுமார் மதியம் 3.30 மணியளவில் யானை பாகனையும் அவரது உறவினரையும் மிதித்துள்ளது. யானை பாகனின் உறவினர் சுசிபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யானை பாகனான உதயகுமார் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சைப்பலனின்றி அங்கேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த துயர சம்பவம் நடைபெற்றதையடுத்து திருச்செந்தூர் கோயில் நடை சுமார் 45 நிமிடங்கள் மூடப்பட்டன. மேலும், சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்ற பின் கோயில் நடை திறக்கப்பட்டது.