மலைகளின் இளவரசியான  கொடைக்கானலின் 176-வது பிறந்தநாள், கொரோனா ஊரடங்கினால் இரண்டாவ‌து ஆண்டாக‌ களையிழந்து காணப்படுகிறது



கொடைக்கானல் என்று அழைக்கப்படும் இந்த அழகிய மலைப்பிரதேசத்தின் பெயர் உண்மையாக கொடைக்கானல் என்பதே ஆகும். இன்னும் சொல்லப்போனால் கொடிகளால் சூழப்பட்ட காட்டுப்பகுதி என்பதுதான் இதன் அர்த்தம். கொடி என்றால் காடுகளில் மரங்களையோ அல்லது வேறு ஏதேனும் ஆதாரங்களைப் பற்றி வளரக்கூடிய, ஆங்கிலத்தில் Creepers என்று சொல்லப்படுகிற கொடிகள் என்று பொருள். கானல் என்றால் - காடு என்பது பொருள் (கானகம், வனம்). 



இதன் காரணம் கொண்டுதான், இப்பெயர் (கொடிக்கானல்) என அழைக்கப்பட்டது. (நாளடைவில் மறுவி கொடைக்கானலாக மாறியது) நிஜத்திலும் இந்த இடம் அப்படித்தான் இருந்தது. மிகுந்த  பரப்பளவும், அதிக அடர்த்தியாகவும், அநேக வன விலங்குகளின் வாழ்வாதாரமாகவும், பச்சை வர்ண பட்டு உடுத்திய அழகு தேவதையாகவும்  திகழ்ந்து வருகிறது  இந்த மலைகளின் இளவரசி.



அடர்ந்த வனப்பகுதியாக இருந்த கொடைக்கானலில் கடந்த 1845-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் உருவாக்கிய ஓய்வு இல்லத்தில் மே 26-ஆம் தேதி அன்று முதல் முதலாக குடியேற்றத்தை ஏற்படுத்தி, மெல்ல மெல்ல நகர பகுதியாக தொடங்கினர். இதனை அடிப்படையாகக் கொண்டு பழங்குடி மக்களை தவிர்த்து சமவெளிப்பகுதிகளில் இருந்தும், தரைப்பகுதிகளில் இருந்தும் முதலில் வெளிமனிதர்கள் குடியேறிய ஆண்டாக 1845-ஆம் ஆண்டு உள்ளது.



இவ்வாறு வெளிமக்கள் குடியேறிய ஆண்டினை கொடைக்கானல் நகரம் பிறந்த தினமாக கடந்த சில ஆண்டுகளாக நகராட்சியால் கொண்டாடப்பட்டு வந்தது இந்த நாளில் பல்வேறு தரப்பு பொதுமக்களுக்கும், வருகைபுரியும் சுற்றுலாப்பயணிகளுக்கும்  இனிப்புகள் வழங்கி சிறப்பாக நகராட்சியால் கொண்டாடப்படுவது வழக்கம், இந்த நாளில் கொடைக்கானல் மேம்பாட்டுக்காக சில திட்டங்களும் அறிவிக்கப்படும்,



பொதுமக்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியடைவர், இந்நிலையில் கொரொனா நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்களும் தடைபட்டுள்ளன. மேலும் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைக்கு மட்டுமே அரசாங்க அதிகாரிகளால் தீவிரம் காட்டப்பட்டு வருவதாலும் மலைகளின் இளவரசியின் 176 பிறந்தநாள் கொண்டாடப்படாமல் கலையிழந்து காணப்படுகிறாள் மலைக‌ளின்
இளவரசியான கொடைக்கானல்.