மதுராந்தகம் அருகே  அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு சென்னை வந்த வேனும், கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்டதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


அதிமுக பொதுக்குழுக் கூட்டம்:


சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்திற்கு ஓபிஎஸ் வருகை தராத நிலையில், ஈபிஎஸ் மட்டும் வருகை தந்துள்ளார். இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் சென்னையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.


வேன் மீது லாரி மோதல்:


இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை ஏரிக்கரை என்ற இடத்தில், சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து மாற்று சாலையில் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து மற்றும் வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேனில்  பயணம் செய்த 13 பேரும், ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 6 பேரும் காயமடைந்தனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் திருச்சி To சென்னை சென்னை To திருச்சி ஆகிய இரு தேசிய நெடுஞ்சாலையில்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.




13 அதிமுகவினர் காயம்:


திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கொடுங்காலூர் பகுதியில் இருந்து சென்னையில் நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வேனில்  20 மேற்பட்டோர் பயணம் செய்தனர். லாரி மோதியதில்,  வேனில் இருந்த 13 அதிமுக தொண்டர்கள் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




போக்குவரத்து நெரிசல்:


இன்று திங்கள் கிழமை என்பதால் ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள் கிழமை சென்னைக்கு அனைவரும் வருவார்கள் என்பதால் பொதுவாகவே இந்த வழித்தடத்தில் வாகன நெரிசல் ஏற்படும். இதனால், சென்னைக்கு வரும் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்லும். தற்போது விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் சீரமைத்து வருகின்றனர்.