இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை சென்னை திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியது. ஆழ்கடலில் ஒரு குறிப்பிட்ட தொலைவு சென்றால் தான் மீன்கள் கிடைக்கும் என்பதால் தமிழக மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்வது வழக்கம். அந்த பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை இருக்கும் நிலையில் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக அடிக்கடி இலங்கைக் கடற்படையினர் கைது செய்யும் கொடுமையும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கு தீர்வு காண நெடுங்காலமாக  கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தாலும் அது முடிவுக்கு வருவதாக இல்லை. 


இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் கூட இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 45 மீனவர்கள் மற்றும் பிடித்து வைக்கப்பட்டுள்ள 138 மீன்பிடிப் படகுகளை விடுவித்திட தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். 


அதில், மீனவர்கள் கைது குறித்து கவலைப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையிலான இது போன்ற செயல்களால் மீனவர்கள் அச்சப்படுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 13 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவதாக இலங்கை நீதிமன்றம் தெரிவித்திருந்தது.






நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சார்பில் அதிகாரி இந்திய மீனவர்களைச் சந்தித்து இனிப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருவதாகவும் தூதரக அதிகாரி தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்று காலை 13 மீனவர்கள் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.