CM Stalin Foreign Visit: தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை மேலும் ஈர்க்கும் வகையில்,  முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 28ம் தேதி ஸ்பெயின் புறப்படுகிறார்.


உலக முதலீட்டாளர்கள் மாநாடு:


சென்னை நந்தம்பாக்கத்தில் 100 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான முறையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதன் முடிவில்  இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 631 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம், 6 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் 26 லட்சத்து 90 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமிழக அரசின் நோக்கம் எனவும்,  முதலீட்டாளர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.


முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின் பயணம்:


உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவிற்கு பின் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தமிழ்நாட்டிற்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவும் செல்கிறார். உலக பொருளாதார மாநாட்டுக்கு செல்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் என்னை அறிவுறுத்தி உள்ளார். இந்த மாநாட்டின் மூலம் தொழில், எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளிலும் முதலீடுகள் குவிந்துள்ளது. தோல் மற்றும் தோல் பொருட்கள் அல்லாத தொழிற்சாலையில் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. 


வெளிநாடு பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சரே நேரில் சென்றார். எதிர்வரும் வாரங்களில் புதிய ஒப்பந்தங்களும் வர உள்ளது. தென் தமிழகத்திற்கும், மேற்கு தமிழகத்திற்கும், டெல்டா மாவட்டத்திற்கும், வட தமிழகத்திற்கும் சென்னைக்கும் சேர்த்து அனைத்து பகுதிகளும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி இருக்க வேண்டும் என எண்ணியே இந்த முதலீடுகள் வரப்பெற்றுள்ளது. 600-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2 நாட்களில் கையெழுத்தாகி உள்ளன.


”மீட்டெடுக்கப்பட்ட தமிழகம்”


முதலமைச்சரின் இலக்கு என்பது பரவலாக்கப்பட்ட வளர்ச்சி, அனைவருக்கும் எல்லாம் என்பது தான். அவரது தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகம் மீட்டெடுக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக மகத்தான வளர்ச்சியை கண்டுள்ளது. 2 ஆண்டுகளில் மட்டும் ஏற்றத்தாழ ஒரு லட்சம் கோடி முதலீடுகள் வந்துள்ளன. படித்த இளைஞர்களுக்கும், கிராமப்புற பெண்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதில் மிக தீவிரமாக செயல்பட்டு அதுபோன்ற வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மிகுந்த கவனத்துடன் அரசு செயல்படுகிறது. நடந்து முடிந்த மாநாட்டின் மூலமாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே முதலமைச்சரின் எண்ணம். ஒரு டிரில்லியன் டாலர் என்ற கனவை நோக்கி உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அவரின் வெளிநாட்டு பயணத்தை தொடர்ந்து பல முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன” என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.