ஒரு வாரத்துக்கு முன்னர்வரை கொரோனா பாதிப்பு கூடுதலாக இருந்த கோவையில், தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியது. ஆனால் கொரோனா தாக்கத்துக்குப் பிந்தைய கரும்பூஞ்சைத் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமைவரை 123 பேர் கரும்பூஞ்சைத் தொற்றுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இதுவரை 33 பேர் குணமடைந்துள்ளனர் என்பதை உறுதிசெய்ய முடிகிறது.
கரும்பூஞ்சைத் தொற்றை அறிவிக்கை செய்யப்பட்ட (notifiable disease) நோயாக அரசிதழில் குறிப்பிடப்பட்டிருப்பதால், இதன் பாதிப்பு விவரங்கள் முறைப்படி ஆவணப்படுத்தப்பட வேண்டும். இது குறித்த புள்ளிவிவரங்கள் ஆள், இடம், காரணம் ஆகியவை உள்பட பல தனிப்பட்ட விவரங்களைக் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் இந்தத் தொற்றின் பாதிப்பைப் புரிந்துகொள்ளவும் அதன் அடிப்படையில் சிகிச்சை முறையை உருவாக்கவும் அதன் பரவலை மேற்கொண்டு கட்டுப்படுத்தவும் அது தொடர்பான கொள்கையை அரசு உருவாக்கவும் முடியும். ஆனால் பல மாவட்டங்களில் சிகிச்சைக்கு வருவோரைத் தவிர மற்றவகையில் கரும்பூஞ்சைத் தொற்றைக் கண்டறிந்து ஆவணப்படுத்த போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என சுகாதார உரிமைச் செயற்பாட்டாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தற்போது 20-க்கும் மேற்பட்ட கரும்பூஞ்சை நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் உயிரிழந்துவிடுகின்றனர் என்கிறார்கள், மூத்த மருத்துவர்கள். இது, தேசிய சராசரிக்கு இணையான அளவாகும். மற்ற சில தனியார் உயர்தர மருத்துவமனைகளிலும் 10 சதவீதம் முதல் 20 சதவீதம்வரையிலான நோயாளிகளுக்கு இறப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்போதைக்கு மாவட்டத்தில் புதிய கரும்பூஞ்சைத் தொற்று ஒற்றை இலக்கத்துக்குள் இருந்தாலும், கொரோனாவைவிட இதை குணப்படுத்துவது கடினமான காரியமாக இருக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். ஏனென்றால், கரும்பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தாக வேண்டும்; இரண்டு . அல்லது மூன்று வாரங்களாவது அவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டியது அவசியம்; அதன் பிறகும் அவர்களுக்கு நான்கு மாதங்கள்வரை மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்பவையே இதில் இருக்கும் சிரமங்கள்.
சிகிச்சையில் இருக்கும் முதல் பிரச்னை, இதற்கான முதன்மை மருந்தாகப் பயன்படுத்தப்படும் லிபோசோமால் ஆம்போடெரிசின் பி மருந்து தட்டுப்பாடு. கோவையைப் பொறுத்தவரை, தனியார் மருத்துவமனை நிறுவனங்கள் எப்படியோ வாங்கிவிடுகிறார்கள். அப்படி வாங்கிய பிறகு இன்னொரு பிரச்னை, சிகிச்சையில் காத்திருக்கிறது. ஆம்போடெரிசின் மருந்துதான் பெரும்பாலானவர்களுக்கு ஒரே வழியாக இருக்கையில், அதன் மருந்து நச்சானது அடிக்கடி நோயாளிகளின் கிரியேட்டினின் அளவை கூடுதலாக்கிவிடுகிறது; இதனால் உயிருக்கே ஆபத்தாகும் நிலையும் ஏற்படுகிறது.
இதைவிடக் கொடுமை, உடலின் சில உறுப்புகளை மாற்றியமைக்கவும் வெட்டி எடுக்கவுமான கட்டாயமும் உருவாகிறது என்கின்றனர் அறுவைச்சிகிச்சை வல்லுநர்கள். முகத்தில் வீக்கம்போலத் தொடங்கும் கரும்பூஞ்சை பாதிப்பால் சில பகுதிகள் அழுகும்நிலைகூட ஏற்படும். அந்தப் பகுதிகளை நீக்கி முகமாற்று அறுவைச்சிகிச்சை செய்ய நேரிடலாம். குறிப்பாக கண்ணையேகூட எடுக்கவேண்டி வரலாம் அல்லது கண்ணின் கருவிழியை அகற்றியாக வேண்டியிருக்கும் அல்லது சைனஸ் திசுக்களை அகற்றவேண்டியிருக்கும் என மருத்துவர்கள் விவரிப்பதைக் கேட்டால், கதிகலங்குகிறது.
இதையெல்லாம் தாண்டி மூளைவரைக்கும் பூஞ்சையின் தாக்கம் செல்லக்கூடும் என்பதும் இதில் உச்சபட்ச துயரம். அப்படி மூளைக்குள் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் அதைச் சரிசெய்வது பெரும் சவாலாகிவிடும்; பல மாதங்கள் சிகிச்சை அளித்தால்தான் உயிரையாவது காப்பாற்ற முடியும் எனும் நிலையும் ஏற்படலாம். இவ்வளவு ஆபத்துச் சவால்கள் இருந்தாலும், பெரும்பாலான நோயாளிகள் கண்ணெல்லாம் வீங்கி மூளைவரை பாதிப்பு போய் சுயநினைவும் இழந்த நிலையில் வருகிறார்கள்; அந்தக் கட்டத்தில் மருத்துவர்களால் என்னதான் செய்யமுடியும் என ஆதங்கப்படுகின்றனர், மருத்துவ வல்லுநர்கள்.