தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலை மசோதா அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ.-க்களுக்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது. 


உழைப்பாளர் தினத்தன்று (மே,1,2023) 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.


12 மணி நேர சட்ட மசோதா:


தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா கடந்த மாதம் 21 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.  இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சார்பில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென பலரும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தினர்.


கடந்த 2020 ஆம் ஆண்டு 12 மணி நேர வேலை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததை தொடர்ந்து மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்ட மசோதாவின் படி, 12 மணி நேர வேலை என்பது கட்டாயம் கிடையாது. அதாவது 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே கட்டாயம்.  12 மணி நேரம் வேலை செய்யலாமா வேண்டாமா என்பதை தொழிலாளர்கள்தான் முடிவு செய்ய முடியும். தொழிலாளர்களின் ஒப்புதலுடன் தான் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


அமைச்சர்  சொல்வது என்ன? 


12 மணி நேர வேலை சட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார். அதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தக்கூடியதாக இருக்கும். எடுத்துக்காட்டாக மின்னணுவியல் துறை நிறுவனங்கள், தோல் அல்லாத காலணியை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே பொருந்தும் என  தெரிவித்திருந்தார்.


மசோதா திரும்ப பெறப்பட்டது:


இதற்கு பல தரப்பிடமிருந்து கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மசோதா திரும்ப பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சட்டப்பேரவை செயலகம் அனுப்பியுள்ள கடிதத்தில்’ “சட்டமன்றப் பேரவையில் 21-4-2023 அன்று நிறைவேற்றப்பட்டு.  ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னர். இச்சட்டமுன்வடிவின் மீதான செயலாக்கம் நிறுத்திவைக்கப்படுவதாக  முதலமைச்சர் அறிவிக்கப்பட்ட நிலையில், இச்சட்டமுன்வடிவை அரசு திரும்பப் பெறுவதென முடிவெடுத்ததையடுத்து அரசால் திரும்பப் பெறப்பட்டது என்று உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பெறுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.




மேலும் வாசிக்க..


High court notice: அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு... இபிஎஸ்-க்கு நோட்டீஸ்....


Vijay Trisha Pic: லியோ ஸ்பாட்டில் விஜய்யுடன் கூல் போஸ்... த்ரிஷாவின் பர்த்டே க்ளிக்!